எழுத்தின் அளவு: அ+ அ- அ
தருமபுரி மாவட்டம் அரூரில் துணை முதலமைச்சர் பங்கேற்ற நிவாரண உதவி வழங்கும் விழாவில், மக்களை கடும் இன்னல்களுக்கு ஆளாக்கியதுடன் கொடுத்த நிவாரண பொருட்களையும் திமுகவினரே பிடுங்கி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஃபெஞ்சல் புயலே பரவாயில்லை என எண்ணி வேதனைப்படும் அளவிற்கு மக்களை வேதனைக்குள்ளாக்கிய திமுகவினரின் விளம்பர அரசியல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
கரையை கடந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. கனமழையால் தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள வாணியாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர பகுதிகளான ஆத்தோர வீதி, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இரவோடு இரவாக வருவாய்த் துறையினர், அங்குள்ள பொதுமக்களை முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
இந்த சூழலில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்தார். 5 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், போர்வை அடங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கப்பட்டன. அடுத்ததாக ஊத்தங்கரை செல்லவேண்டி இருந்ததால், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளம்பரத்திற்காக ஒரு சிலருக்கு மட்டும் நிவாரணப்பொருட்களை கொடுத்துவிட்டு முகாமில் இருந்து வேறொரு இடத்தில் விளம்பரம் தேட ஊத்தங்கரை நோக்கி புறப்பட்டார். அப்போது மீதமிருந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் வழங்கினர்.
பாதிக்கப்பட்ட மக்களின் துயரை துடைக்காமல், வெற்று விளம்பரம் மட்டுமே தேடும் திமுகவினர், நிவாரணம் வாங்க வரும் பொதுமக்களை வரிசைப்படுத்தாமல், நிவாரணப் பொருட்களை வழங்க தொடங்கினர். பொதுமக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்ததால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதனையடுத்து முகாமிற்கு நுழைந்த பெண் காவலர்கள், குவிந்திருந்த திரளான பெண்களை கைகளால் பின்னுக்கு தள்ளியபடி, கூட்டத்தை கட்டுப்படுத்த போராடினர்.
கடும் இன்னல்களை சந்தித்து நிவாரணம் வாங்க வந்த மக்களை கண்டு ஆத்திரமடைந்த திமுக பேரூராட்சி துணைத்தலைவர் சூர்ய தனபால், முன்னேறி வந்த பெண்களை தாக்கியதுடன் அவர்களின் கையில் இருந்த போர்வைகளை பிடுங்கி அராஜகத்தில் ஈடுபட்டார்.
அதற்கும் ஒருபடி மேல் சென்ற சூர்ய தனபால், திடீரென தனது மேஜைக்கு முன் இருந்த பெண்களை தலையிலும், தோள்பட்டையிலும் தாக்கியதுடன், கொடுத்த நிவாரணப் பொருட்களை வலுக்கட்டாயமாக பிடுங்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபக்கம் இயற்கை பேரிடரால் அவதிக்குள்ளான மக்கள், மறுபக்கம் விளம்பர திமுக அரசு வழங்கிய நிவாரண உதவிகளுக்காக அல்லல்பட்டனர். முறையான ஏற்பாடுகள் செய்யாமல், சிறிய இடத்திற்குள் அத்தனை மக்களை அடைத்து வைத்தது மட்டுமின்றி, நிவாரணம் பெற வந்த பெண்களை தாக்க எவ்வாறு தைரியம் வந்தது என சமூக ஆர்வலர்கள் சரமாரி கேள்வி எழுப்பி வருகின்றனர்.