எழுத்தின் அளவு: அ+ அ- அ
டெல்லியில் நடைபெற்ற சீனியர் நேஷனல் கேரம் போட்டியில், சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கீர்த்தனா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். உலக கோப்பை போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ள நிலையில், போட்டியில் பங்கேற்க பணம் தடையாக உள்ளதால் தமிழக அரசு தனக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்...
சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கீர்த்தனா. தந்தையை இழந்த அவர், பாழடைந்த வீட்டில் தனது தாய் மற்றும் இரண்டு அண்ணன்களுடன் வசித்து வருகிறார். வறுமை கீர்த்தனாவை துரத்திய போதும், கேரம் விளையாட்டில் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடி வருகிறார்...
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற சீனியர் நேஷனல் கேரம் போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய கீர்த்தனா, அதில் வெற்றி பெற்று உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்று வீடு திரும்பிய வீராங்கனை கீர்த்தனாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய அவர், உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றும், போட்டியில் பங்கேற்கப் பணம் தடையாக உள்ளதாகத் தெரிவித்தார். தந்தையை இழந்து வறுமையில் வாழ்ந்து வருவதாகவும், உலகக் கோப்பையில் கலந்து கொள்வதற்கு அரசு பண உதவி செய்தால், கோப்பையை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பேன் எனவும் கூறினார். தாம் வசிக்கும் வீட்டில் கேரம் போர்டு மற்றும் வெற்றி பெறும் கோப்பைகளை வைப்பதற்கு கூட இடமில்லாமல் தவித்து வருவதாகவும், அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்
அமெரிக்காவில் நடந்த உலக கேரம் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை காசிமா, மூன்று தங்கப் பதக்கங்களை பெற்ற நிலையில், தமிழக அரசு அவருக்கு ஊக்கத் தொகை வழங்கி கெளரவித்தது. அதே போல், உலக கோப்பை போட்டியில் பங்கேற்க பணம் தடையாக இருக்கும் வீராங்கனை கீர்த்தனாவுக்கும் தமிழக அரசு உதவ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது