எழுத்தின் அளவு: அ+ அ- அ
மின்வெட்டு இல்லாத தமிழகம் என்று விளம்பர திமுக அரசு முழங்கி வரும் நிலையில், திண்டுக்கல் மாநகராட்சியில் நடந்த மாதாந்திர கூட்டத்தில் இருமுறை மின்வெட்டு ஏற்பட்டதால், கூட்டம் பாதியிலேயே முடிந்தது. மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச வந்த இடத்தில், மின்வெட்டு பெரிய பிரச்சினையாக இருப்பதாக கவுன்சிலர்கள் கொந்தளித்தது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
திண்டுக்கல் மாநகராட்சி மாதாந்திர கூட்டம், மாதம் ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். அப்போது மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கப்படுகிறது. மேலும், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் கிடப்பில் உள்ள திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டம் கடந்த மூன்று மாதங்களாக நடக்கவில்லை. மாநகராட்சி கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும் என்று கவுன்சிலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த மாநகராட்சி மாதாந்திர கூட்டத்தில் திமுக, அஇஅதிமுக, பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் பங்கேற்று, வார்டு பிரச்சினைகள் குறித்து கவுன்சிலர்கள் முன்வைத்தனர். அப்போது திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள், தங்கள் பகுதியில் தெரு விளக்கு போடாததால் இருண்டு கிடப்பதாகவும், எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் வரி மட்டும் வசூலிப்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். தங்களது பகுதிகளுக்கு எந்த வசதிகளையும் செய்து தரவில்லை என்று பாஜக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கவுன்சிலர்கள் தங்கள் பிரச்சினைகளை முன்வைத்துக் கொண்டிருக்கும்போது இருமுறை மின்வெட்டு குறுக்கிட்டதால் கூட்டம் பாதியில் முடிக்கப்பட்டது. தங்கள் பகுதி மக்களின் குறைகளை எடுத்து பேசுவதற்கு அவகாசம் கொடுக்காமல் கூட்டத்தொடரை பாதியில் முடித்தது கண்டிக்கத்தக்கது என்று கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மின்வெட்டு இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று விளம்பர திமுக அரசு முழங்கி வரும் நிலையில், மக்கள் பிரச்சினைகளை பேசக்கூடிய மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம், மின்வெட்டு பிரச்சினையால் பாதியில் முடிக்கப்பட்டுள்ளது. விளம்பர திமுக அரசின் சொல் ஒன்று செயல் ஒன்று என்பதை, இந்த கூட்டம் நிரூபித்துள்ளது.