எழுத்தின் அளவு: அ+ அ- அ
கடந்த 2020 ஆம் ஆண்டு உயிரிழந்த அரசு மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் குடும்பத்திற்கு, ஒரு கோடி ரூபாய் நிதியும், அரசு வேலையும் வழங்கப்பட்டுவிட்டதாக, மருத்துவ கல்வி இயக்குநர் சங்குமணி, உண்மைக்கு புறம்பாக பொய்யான தகவலை அளித்துள்ளதாக, மறைந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் மனைவி அனுராதா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சங்குமணியை, அனுராதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கும் ஆடியோ வெளியாகியுள்ளது குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...
அரசு மருத்துவர்களுக்கு நியாயமான ஊதியம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும் வகையில் அரசாணை 354-ஐ அமல்படுத்தக் கோரி இறுதிவரை போராடிய அரசு மருத்துவர் லட்சுமி நரசிம்மன் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி உயிரிழந்தார். அவர் முன்னெடுத்த போராட்டத்திற்கான 354-ஐ அரசாணையும் இதுவரை அமல்படுத்தவில்லை.
இந்தநிலையில், ‘மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் உயிர்த் தியாகத்துக்கு மதிப்பில்லையா? என்றும், தலைப்பில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு தலைவர் பெருமாள் பிள்ளை எழுதிய கட்டுரை பிரபல நாளிதழில் வெளியானதுடன், இதுதொடர்பாக அவர் பேட்டியும் அளித்திருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி வெளியிட்ட அறிக்கையில், “அரசாணை 354-ஐ அமல்படுத்துவது குறித்து மருத்துவ சங்கங்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக தீர்வு எட்டப்படவில்லை என விளக்கம் அளித்தார். இதுகுறித்து ஒற்றுமையுடன் ஒருமித்த கருத்தை தெரிவித்தால் மட்டுமே கோரிக்கையை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது என குறிப்பிட்டிருந்தார். மேலும் மறைந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மன் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க அமைச்சர் உத்தரவிட்டும், இதுவரை அவர்கள் ஏற்க முன்வரவில்லை என்றும், மருத்துவரின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி கடந்த ஜனவரி 10-ம் தேதி வழங்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணியின் விளக்கம் உண்மைக்கு புறம்பாக உள்ளதாக மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் மனைவி அனுராதா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தனது குடும்பத்திற்கு, ஒரு கோடி ரூபாய் நிதியும், அரசு வேலையும் இதுவரை வழங்கவில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் சங்குமணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உயிரிழந்த மருத்துவர் லக்ஷ்மி நரசிம்மனின் மனைவி அனுராதா பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், தன்னுடைய கணவர் உயிரிழந்த பிறகு, ஒரு கோடி ரூபாய் நிதி உதவியை யாரிடம் கொடுத்தீர்கள், எதற்கு இவ்வாறு பொய் கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். தனது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுவிட்டது என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள், யாருக்கு வேலை கொடுத்தீர்கள், எப்போது கொடுத்தீர்கள் என அடுக்கடுக்கான கேள்விகளை அனுராதா எழுப்பினார். பொய்யான தகவல்களை செய்தியாக வெளியிட்டதால் உங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் எனவும் அனுராதா எச்சரித்தார்.
தனது கணவர் உயிரிழந்த பிறகு, பென்ஷன் கிடைக்கவே தங்களுக்கு நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கக் கூடிய சூழலில், தாம் வேலைக்கு செல்லக்கூடிய பெண் என்பதால், தன்னுடைய குடும்பம் தப்பியதாகவும், இல்லையெனில் நாங்களும் என்னுடைய குடும்பமும் அமைச்சர் வீட்டு வாசலில் அல்லது அதிகாரிகள் வீட்டில் வாசலில் வந்து பிச்சை தான் எடுத்திருக்க வேண்டும் என்று அனுராதா ஆவேசமாக பேசினார்.
இந்த ஆடியோ விவகாரம் மருத்துவத்துறை வட்டாரங்களில் கசிய தொடங்கி உள்ள நிலையில், மருத்துவர் லட்சுமி நரசிம்மனுடைய ஆன்மா சாந்தி அடையக்கூடிய அளவில், இது போன்ற பொய் செய்திகளை பரப்புவதை விடுத்து, மருத்துவர்களின் ஊதியம் தொடர்பான அரசாணை 354-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.