எழுத்தின் அளவு: அ+ அ- அ
விளம்பர திமுக ஆட்சியில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி வேதனை நிகழ்ச்சியாக மாறியுள்ள நிலையில், 21 ஆண்டுகளுக்கு முன்பு மாண்புமிகு அம்மா ஆட்சியில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை ஒப்பிட்டு அனைவரும் வியந்து வருகின்றனர். நவீன வசதிகள் இல்லாத காலத்தில் பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சியை எவ்வித உயிரிழப்பும் குழப்பமும் இன்றி மாண்புமிகு அம்மாவின் அரசு நிகழ்த்திய சாதனை குறித்தும், அனைத்து வசதிகளும் இருந்தும் 5 உயிர்களை காவுவாங்கிய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சோதனை குறித்தும் அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
சென்னை மெரினா கடற்கரையில் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 6ம் தேதி நடைபெற்ற இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க லட்சக்கணக்கில் படையெடுத்தனர் பொதுமக்கள். இதற்கான ஒத்திகையே மிரட்டும் வகையில் இருந்ததால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கடற்கரையில் திரண்டது மக்கள் கூட்டம். கழுகுப் பார்வையில் பார்த்தால் கடற்கரை மண் தெரியாத அளவுக்கு குடைகளை பிடித்தபடி, வானில் நிகழ்த்தப்பட்ட சாகசங்களை மெய்சிலிர்க்க கண்டு ரசித்தனர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான பொதுமக்கள். 3 மணி நேர சாகசத்தை கண்டு களித்த பின்னர் வீடு திரும்புவதற்கு மக்கள் அதை விட பெரிய சாகசம் செய்ய வேண்டியிருந்தது.
15 லட்சம் பேர் கூடுவார்கள் எனத் தெரிந்தும், அலட்சியமாக இருந்து அடிப்படை வசதிகளைக் கூட செய்யாமல் கோட்டை விட்ட விளம்பர திமுக அரசின் கையாலாகாதனத்தால் விலைமதிப்பற்ற 5 உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளன. இதற்கு யார் பொறுப்பேற்பது? என்ற கேள்வி பல்வேறு தரப்பில் இருந்தும் முன்வைக்கப்பட்ட நிலையில், அடுத்தமுறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று கூறி, பொறுப்பை தட்டிக் கழித்து கடந்து போய்விட்டார் அலங்கோல ஆட்சியின் முதலமைச்சர் ஸ்டாலின்.
எல்லாம் சரி, இதுபோன்று லட்சக்கணக்கில் மக்கள் கூடும் போது என்னென்ன செய்ய வேண்டும் என்பதை கணித்து அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டியதுதானே ஒரு அரசின் கடமை. ஆனால் அந்த கடமையில் இருந்து தவறிவிட்டு, அதை அரசியலாக்க வேண்டாம் என்று சால்ஜாப்பு சொல்லி கெஞ்சி சரணடைந்திருக்கிறது இந்த மக்கள் விரோத திமுக அரசு. இதற்கு மேல் வெட்கக்கேடு ஏதும் வேண்டுமா?
சென்னையில் வெறும் பத்தாயிரம் பார்வையாளர்களை கொண்ட கார் ரேஸ் நடத்த ஒரு மாதம் முன்பு ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் இரவு பகலாக பம்பரமாக சுழன்றதை யாரும் மறந்து விட முடியாது. ஆனால் பதினைந்து லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என தெரிந்தும், போதிய ஆலோசனைக் குழுக்களை அமைக்காமல், ஒரு சாதாரண நிகழ்ச்சி போல நடத்தியதன் விளைவு, பெருந்துயரத்தில் முடிந்திருக்கிறது. விளம்பர திமுக அரசின் நிர்வாக திறமையின்மையை இந்த சம்பவம் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது என்பதுதான் உண்மை.
அதேசமயம், கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி, புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மாவின் ஆட்சிக் காலத்தில் இதேபோன்றதொரு வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் முதல்முறையாக நடந்தது. அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா மற்றும் Airchief மார்ஷல் எஸ். கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்ற தாரக மந்திரத்தின்படி மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவின் அரசு, லட்சக்கணக்கில் கூடியிருந்த மக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அற்புதமாக செய்திருந்தது.
அரசு இயந்திரத்தை முறையாக, சரியாகப் பயன்படுத்தி தேவையான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா. இதன் விளைவாக அந்நிகழ்ச்சியை பார்வையிட்ட மக்கள் எந்த பிரச்னையுமின்றி பத்திரமாக வீடு திரும்பினர். எந்த நெரிசலும் ஏற்படவில்லை. போக்குவரத்து தடையும் ஏற்படவில்லை. உயிரிழப்பும் இல்லை. அந்த அளவுக்கு மக்களுக்கான தேவைகளை பார்த்து பார்த்து செய்திருந்தது புரட்சித் தலைவி அம்மாவின் அரசு.
அன்று மெட்ரோ ரயில் கிடையாது. பறக்கும் ரயில், சிறப்பு ரயில் மற்றும் அரசு சிறப்புப் பேருந்துகள் மட்டுமே. அதை முறையாக ஏற்பாடு செய்து இருந்ததால், எந்த அசம்பாவிதமும் இன்றி விமான சாகச நிகழ்ச்சியை ரசித்து மக்கள் பத்திரமாக திரும்பிச் சென்றார்கள்.
அப்போதே இவ்வளவு பேர் வந்திருந்தார்கள் என்றால், இப்போது அதற்கு மேல் மக்கள் வருவார்கள் என்று ஊடகங்கள் தெரிவித்திருந்தும், இன்றைய விளம்பர திமுக அரசு அலட்சியமாக இருந்துள்ளது. நவீன வசதிகளுக்கு பஞ்சமில்லாத இந்த காலத்திலும், சாக்குபோக்கு சொல்லி தப்பிக்க பார்க்கும் விளம்பர திமுக அரசு, தனது கடமையில் இருந்து தவறுவது, இது முதன்முறையல்ல.
மாண்புமிகு அம்மாவின் ஆட்சியில் நடந்த வான் சாகச நிகழ்ச்சியின் போது செய்யப்பட்ட முன்னேற்பாடுகளை, விளம்பர திமுக அரசு, கவுரவம் பார்க்காமல் அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்திருந்தாலே மக்களை பெருந்துயரத்தில் இருந்து காப்பாற்றி இருக்கலாம் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
21 ஆண்டுகளுக்கு முன்பே லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து வான் சாகச நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருந்தார் மாண்புமிகு அம்மா. ஆனால் விளம்பர திமுக ஆட்சியில் தற்போது நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியோ சோதனை நிகழ்ச்சியாக மாறியுள்ளதுதான் சோகம்... இதன்மூலம், முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் செயலற்ற தன்மை வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிட்டு தற்போது சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. மு.க.ஸ்டாலினின் கையாலாகாத நிர்வாகத்தை விமர்சித்தும், மாண்புமிகு புரட்சிதலைவி அம்மாவின் நிர்வாகத் திறமையை வெகுவாகப் பாராட்டியும் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆக மொத்தத்தில் தற்போதைய திறனற்ற திமுக அரசால் சொல்லொணா துயரங்களை சந்தித்து வரும் பொதுமக்கள், மாண்புமிகு அம்மாவின் பொற்கால ஆட்சியை எதிர்பார்த்து ஏக்கத்துடன் காத்துள்ளனர் என்பதே இதன்மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது என்றால் மிகையல்ல.