உலக அமைதியை வேண்டிய குரல் ஓய்ந்தது... போப் மறைவால் கண்ணீரில் கத்தோலிக்கர்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எளிய வாழ்க்கை வாழ்ந்து போப் ஆண்டவராக உயர்ந்த போப் பிரான்சிஸின் வாழ்க்கை பயணம் குறித்து தற்போது காணலாம்...

இத்தாலியில் இருந்து அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் ((Buenos Aires)) நகருக்கு இடம் பெயர்ந்த Mario Jose Bergoglio - Regina Maria Sivori தம்பதியின் 5 குழந்தைகளில் ஒருவராக 1936ம் ஆண்டு பிறந்தவர்தான் போப் பிரான்சிஸ். ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ ((Jorge Mario Bergoglio)) என்ற இயற்பெயர் கொண்ட அவருக்கு, pleurisy என்ற அழற்சியால் 20 வயதிலேயே நுரையீரலின் ஒருபகுதி அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் தனது கல்வியை தொடர்ந்த ஜார்ஜ் மாரியோ, வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். உடல் நலப் பாதிப்பு தந்த வெற்றிடமும் இயேசு கிறிஸ்து மீதான ஈர்ப்பும், இயேசு சபையில் 1958-ம் ஆண்டு அவரை இணைய வைத்தது. யூனஸ் அயர்ஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றி, எளிமையான வாழ்க்கை நடத்தி வந்தார் ஹோர்கே. 

பொது வாழ்விற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஜார்ஜ் மாரியோ, 2013-ம் ஆண்டு 16ஆது போப் பெனடிக்ட் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபையின் 266-வது திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருத்தந்தை Francis of Assisi நினைவாக பிரான்சிஸ் என்பதை தனது ஆட்சி பெயராகவும் தெரர்வு செய்துக்கொண்டார். லத்தீன் அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை போப் பிரான்சிஸ். இயேசு சபையிலிருந்து திருத்தந்தைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபரும் அவரே. மூன்றாம் கிரகோரிக்கு பின்பு ஆயிரத்து 200 ஆண்டுகளில் ஐரோப்பாவுக்கு வெளியே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை என்ற சிறப்பும் அவருக்கு உண்டு. 

அனைவரும் சமம் என்ற சமூகநீதி கொள்கைகளை கொண்ட போப் பிரான்சிஸ், எச்.ஐ.வி. உள்ளிட்ட பாதிப்புகளால் ஒதுக்கி தள்ளப்பட்ட நோயாளிகள் மீது பரிவு காட்டினார். 2001இல் எய்ட்ஸ் நோயாளி ஒருவரின் இல்லம் சென்று, அங்கு அவரது கால்களை கழுவி முத்தமிட்டு, அவர்கள் மீதான தனது பரிவை வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி அகதிகளுக்கும் புலம்பெயர்வோருக்கும் எப்போதும் தனது ஆதரவை வழங்கி வந்தார் போப் பிரான்சிஸ்.

போரில்லாத அமைதியான உலகிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த போப் பிரான்சிஸ், உலகில் அடிமை முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். அதேசமயம், பெண்களின் சில குறிப்பிட்ட உரிமைகள் தொடர்பான பிரச்னையில் அடிப்படைவாத கொள்கை கொண்டவராக போப் பிரான்சிஸ் விமர்சிக்கப்பட்டார். திருமண முறிவு, கருக்கலைப்பு, கருத்தடைக்கான உரிமை உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டார். 

கருணைக் கொலை செய்வதைக் கடுமையாக எதிர்த்த போப் பிரான்சிஸ், திருநங்கை, திருநம்பி, ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளடக்கிய எல்ஜிபிஇடி அமைப்பின் செயல்பாடுகளை கடுமையாக எதிர்த்தார். அதே சமயம், அவர்களை கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்.

இந்தநிலையில் தனது 88-வது வயதில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைந்தார். உயிரிழப்பதற்கு முன்னதாக வாட்டிகனில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் கடந்த 20ம் தேதி நடைபெற்ற ஈஸ்டர் ஆராதனையில் பங்கேற்றிருந்தார் போப் பிரான்சிஸ். ரோம் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 7:35 மணிக்கு போப் பிரான்சிஸ், உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் ஈஸ்டர் மறுநாளான்று போப் பிரான்சிஸ் மறைந்திருப்பது உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களை சோகத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

Night
Day