எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்து 680 புதிய மனை பிரிவு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அனுமதி கொடுக்காமல், தமிழக அரசு இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லட்சக்கணக்கான மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குபவர்கள் தவித்து வரும் நிலையில், விளம்பர திமுக அரசால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான விளம்பர திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் அனைத்து துறைகளிலும் தோல்வியை சந்தித்து வருகிறது. குறிப்பாக புதிய மனை, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சொந்த வீடு வாங்குபவர்களுக்கு அந்த கனவு கானல் நீராகவே மாறி வருகிறது என்றே சொல்லலாம்....
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் செயல்படும் அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யம் போன்றவைகளால் பொதுமக்கள் புதிய வீடு மற்றும் மனைகள் வாங்குவதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வருகிறது. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே புதிய குடியிருப்புகளுக்கு அனுமதி என்ற வகையில் விளம்பர திமுக அரசின் செயல்பாடு இருந்து வருகிறது....
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமானது மைய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட சட்டபூர்வமான அமைப்பு என்றாலும், அதன் செயல் பாடுகள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்குகின்றது.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் துவங்கப்பட்டதன் நோக்கம், ரியல் எஸ்டேட் துறையில் வாங்குவோர் மற்றும் விற்பவர்களைப் பாதுகாப்பது, முதலீட்டாளர்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தி ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய உதவி அதன் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும். ஆனால் சமீபகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பல கடுமையான திட்டங்களால், பெருமளவில் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் வணிகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது..
புதிய வீட்டுமனை பிரிவில் அமையும் மின் கம்பிகளையும் தளவாடங்களையும் மாற்றம் செய்வதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட துறைக்கு, விண்ணப்பதாரர்கள் செலுத்தி அதற்கான ஒப்புகை சீட்டை சமர்ப்பிக்கும் பட்சத்தில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் வழங்குமுறை ஆணையம் காலம் தாழ்த்தாமல், பொதுமக்களின் மனை பிரிவு மற்றும் குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்து உத்தரவு வழங்கிட வேண்டும் என புதிய வீட்டு மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்டப்படி திட்டங்களை பதிவு செய்வதற்கு விண்ணப்பித்து உத்தரவு பெறாமலும், பதிவு செய்யாமலும் விற்கப்படும், வீடு, மனைகளுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, சட்ட திருத்தம் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியுள்ளது மிகுந்த வேதனைக்குரியது என்றும் கூறியுள்ளனர்...
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முடங்கியுள்ளதாகவும், உடனடியாக இது போன்ற பிரச்சனைகளை ரத்து செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, புதிய மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வாங்குபவர்களின் கனவு நனவாகும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது