காலமானார் காம்ரெட் - அரசியலில் கடந்து வந்த பாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, 72 வயதில் உடல்நல குறைவால் காலமானார். இடதுசாரிகளில் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்த யெச்சூரி அரசியலில் கடந்து வந்த பாதை குறித்து  இந்த செய்தி தொகுப்பில் காணலாம்...

1952ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் பிறந்தவர் சீதாராம் யெச்சூரி.. ஹைதராபாத் மற்றும் டெல்லியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார். தொடர்ந்து அதே பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

கல்லூரி படிப்பை தொடர்ந்து 1974ம் ஆண்டு SFI எனப்படும் இந்திய மாணவர் கூட்டமைப்பில் சேர்ந்த சீதாராம் யெச்சூரி, 1975ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அப்போது ஏற்பட்ட அவசரநிலை பிரகடனத்தின் போது அவர் கைது செய்யப்பட்டார். 

1978ம் ஆண்டு SFI அகில இந்திய இணைச் செயலாளராக பதவி வகித்த சீதாராம் யெச்சூரி, 1984ம் ஆண்டு சி.பி.எம் மத்திய குழுவில் சேர்க்கப்பட்டார். பின்னர், 1992ல் பொலிட்பீரோவுக்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சி சார்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்த சீதாராம் யெச்சூரி, கடந்த 2005 முதல் 2017 வரை மேற்குவங்க மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017 இல் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதையும் வென்றுள்ளார் சீதாராம் யெச்சூரி.. கடந்த 2015ஆம் ஆண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 5வது பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் சீதாராம் யெச்சூரி. சிறந்த எழுத்தாளரான அவர், பல புத்தகங்களை எழுதியுள்ளார். 
 
2018ல் மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 

சமீபகாலமாக, நுரையீரல் தொற்று காரணமாக கட்சி பணிகளில் ஈடுபடாமல் சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி, உடல்நிலை மோசமான நிலையில் கடந்த 19ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை 3.05 மணிக்கு யெச்சூரி காலமானார். மருத்துவ மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சீதாராம் யெச்சூரியின் உடலை தானமாக வழங்குவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Night
Day