சின்னம்மா அறிவுறுத்தல்படி தூர்வாரும் பணிகள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

மழைக் காலங்களில் சென்னை பெருநகரில், வீடுகளுக்கு உள்ளேயும், குடியிருப்பு பகுதிகளைச் சுற்றிலும் பெருமளவில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால்தான் சென்னை மாநகர் நீரில் தத்தளிப்பதைத் தவிர்க்க முடியும் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்ததோடு, இதற்காக, முக்கியமான கால்வாய்களை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை அடையாறு முகத்துவாரத்தை தூர் வாரும் பணிகளை திமுக அரசு தொடங்கியுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக, ஆங்காங்கே மழை வெள்ளநீர், தேங்கி பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளானார்கள். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல், மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால், நீர் நிலைகளை முன்னதாகவே சரி செய்திருக்க வேண்டும். மழை நீர் வடிகால் பணி, கால்வாய் பணி, முகத் துவாரங்களை தூர் வாரும் பணி ஆகியவற்றை உரிய நேரத்தில் முறையாக மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஆளும் விளம்பர திமுக அரசு இதனைச் செய்யாமல் அலட்சியப் போக்கில் இருந்து வந்ததால், சென்னை உட்பட பல்வேறு இடங்களிலும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் பெருமளவில் தேங்கியதோடு, வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. சென்னை நகரில் பல பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சி அளித்தன. இதனால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி தவித்தனர். 

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக அரசும், உள்ளாட்சி நிர்வாகமும் எவ்வித நிவாரணப் பணிகளையும் மேற்கொள்ளாத நிலையில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, வட சென்னை, புளியந்தோப்பு, பட்டாளம் உள்ளிட்ட இடங்களுக்கு, கடந்த மாதம் 17ம் தேதி நேரில் சென்று, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டோருக்கு உணவு மற்றும் பல்வேறு நிவாரண உதவிகளையும் வழங்கினார். அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

மழையினால் சேதமடைந்த பல இடங்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா நடந்தே சென்று, ஏழை, எளிய மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மழைநீர் புகுந்த வீடுகள், தெருக்கள் மற்றும் தண்ணீரில் தத்தளிக்கும் பகுதிகளை சின்னம்மா பார்வையிட்டார். 

இதனைத் தொடர்ந்து பட்டாளத்தில் செய்தியாளர்களை சந்தித்த கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, ஒருநாள் மழைக்கே சென்னை தாங்கவில்லை என்றும், முக்கிய கால்வாய்கள் மற்றும் முகத்துவாரங்களை விளம்பர திமுக அரசு தூர் வாராததால், ஒருநாள் மழையிலேயே பெருமளவில் தண்ணீர் தேங்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மழைக்கு முன்பே தமிழக அரசு மேற்கொண்டிருக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பது பற்றி விளக்கமாக எடுத்துக்கூறினார். 

ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களை எவ்வாறு தூர் வாரி, முகத்துவாரங்களை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என்பது குறித்து புரட்சித்தாய் சின்னம்மா எடுத்துரைத்தார். அரசு இதைச் செய்யாமல் இருந்தால் வீடுகளுக்குள் மழைநீர் புகுவதையும், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்குவதையும் தடுக்க முடியாது என்று சின்னம்மா திட்டவட்டமாக தெரிவித்தார். அரசு இதனை உடனடியாகச் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் அரசு நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய், வீராங்கல் கால்வாய் ஆகியவற்றின் பராமரிப்பை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. 

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் வீராங்கல் ஓடை ஆகிய 3 வடிகால்கள், பராமரிப்பு பணிகளுக்காக பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப்படும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, சென்னை அடையாறு - பட்டினப்பாக்கம் இடையே உள்ள அடையாறு முக துவாரத்தில் ஆற்று நீர் கடலில் கலக்கும் பகுதியில் தூர்வாரும் பணிகளை திமுக அரசு தொடங்கியுள்ளது. 150 மீட்டர் அகலத்திற்கு மணல் திட்டுக்கள் அகற்றப்பட்டு சுமார் 3 மீட்டர் அளவுக்கு முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தியபடி, அடையாறு ஆற்றிலிருந்து வரும் நீர், தங்குதடையின்றி கடலுக்குச் செல்லும் வழியில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Night
Day