சேறும் சகதியுமாக மாறிய தெருக்கள்... குமுறும் மக்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களின் அடிப்படை வசதிகளுக்கான பணிகளைகூட விளம்பர திமுக அரசு முறையாக செய்யாததால், சென்னை துரைப்பாக்கம் சாய் நகர் பகுதி மக்கள் சேறு சகதிக்கு மத்தியில் வாழும் ஆவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்பகுதி மக்கள் கடந்த 2 மாதமாக அனுபவித்து வரும் இன்னல் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னை துரைப்பாக்கம், சாய் நகர் 9வது குறுக்கு சாலையில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 2 மாத காலமாக சென்னை மெட்ரோ குடிநீர் குழாய் பதிப்பு மற்றும் மின் புதைவட கம்பிகள் பதிப்பிற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக தெருவின் மையப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு மெட்ரோ குடிநீர் குழாய் புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தோண்டப்பட்ட பள்ளத்தை மெட்ரோ குடிநீர் நிர்வாகம் முறையாக மூடவில்லை. அத்துடன் குழாய் இணைப்பையும் முழுமையாக செய்யவில்லை. இதனால் மெட்ரோ குடிநீருடன் கழிவுநீர் கலந்து அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. 

தோண்டப்பட்ட பள்ளத்தை முறையாக மூடாததாலும், குழாய் இணைப்பு சரியாக கொடுக்காததுமே இந்த நிலைமைக்கு காரணம் என குற்றம்சாட்டுகின்றனர் பொதுமக்கள். அரசு ஊழியர்களின் இந்த மெத்தன போக்கால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சகதியில் நடந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அகலமாக இருந்த தங்கள்  
தெரு அரசு ஊழியர்களின் அஜாக்கிரதையால் ஒற்றையடி பாதையாக மாறிவிட்டதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். 

ஒரு வாரத்தில் முடிக்க வேண்டிய பணியை இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீட்டித்து வருவதாகவும், இன்னும் கூட தங்கள் பகுதியில் முழுமையான குழாய் பதிக்கும் பணி முடிந்தபாடில்லை என்றும் அவசர தேவைக்கு கூட வெளியே செல்ல முடியவில்லை என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.
 
முறையாக அதிகாரிகளோ அல்லது வேலையாட்களோ பணிகளை செய்வது இல்லை. பணிகளை விரைந்து முடிக்குமாறு பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் அதை கண்டு கொள்ளவே இல்லை. தெரு முழுவதும் பள்ளம், மேடாகவும் சேறும் சகதியுமாகவும் இருப்பதால் தங்கள் குழந்தைகளால் பள்ளிக்கூடம் செல்லவோ, வாகனங்களை இயக்கவோ சிரமப்படுவதாகவும் கூறுகின்றனர் பொதுமக்கள். 

விளம்பரம் மூலமாக ஆட்சி நடத்தும் திமுக அரசு, பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கான பணிகளில் தேவையின்றி காலதாமதம் செய்வது மக்களை கொந்தளிப்படைய வைத்துள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் நடந்து வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day