எழுத்தின் அளவு: அ+ அ- அ
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, கிராம சபை கூட்டத்தை சுழற்சி முறையில் வேறு வேறு இடத்தில் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர் கோரிக்கை மனு அளித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர், சமூக ஆர்வலரை கொச்சைப்படுத்தி ஒருமையில் வசைபாடிய தொலைபேசி உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராம சபை கூட்டம் என்பது, ஆண்டுதோறும் குடியரசு நாளான ஜனவரி 26, தொழிலாளர் தினமான மே 1, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2, உலக நீர் தினமான மார்ச் 22, மற்றும் உள்ளாட்சி நாளான நவம்பர் 1ம் தேதி, ஆகிய ஆறு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுவது நாம் அறிந்ததே.
இக் கூட்டத்தில் ஊராட்சியின் வளர்ச்சி, தன்னிறைவு, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு போன்ற முக்கிய விவாதங்கள் நடத்தப்பட்டு, உறுப்பினர்களின் அதரவோடு தீர்மானமாக நிறைவேற்றப்படுவது வழக்கம். இந்தநிலையில்தான் கிராம சபை கூட்டத்தை சுழற்சி முறையில் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர் விடுத்த கோரிக்கையை திமுக ஊராட்சி மன்ற தலைவர் கொச்சைப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட சிவபுரத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் லோகநாதன். இவர் கிராம சபை கூட்டத்தை சுழற்சி முறையில் தான் நடத்த வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதனை தொடர்ந்து ஊராட்சி செயலாளர் அச்சுதனை தொடர்பு கொண்டும் கூறியுள்ளார்.
இவரது கோரிக்கையின் அடிப்படையில் சுழற்சி முறையில் கிராம சபை கூட்டம் நடத்த, மூக்கனூர் ஊராட்சிக்கு மாவட்ட நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது. இருப்பினும் சுற்றறிக்கையை மதிக்காமல் கிராம சபை கூட்டம் வழக்கம் போல் மாரியம்மன் கோவில் அருகே 29ம் தேதி நடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சமூக ஆர்வலர் லோகநாதன் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமாரிடம் தொலைபேசியில் முறையிட்டபோது, நீ யாருடா கிராம சபை கூட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற சொல்வதற்கு, வார்டு உறுப்பினரா? என ஒருமையில் பேசியதுடன், கால் சென்ட் இடம் வாங்க கூட துப்பு இல்ல என கொச்சைப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது.
கிராம சபை கூட்டத்தை ஊராட்சிக்குட்பட்ட வேறு வேறு கிராமங்களில் சுழற்சி முறையில் நடத்த சொன்னது குத்தமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.