சொத்துக்காக வீட்டைவிட்டு வெளியேற்றிய மகன்.. மாற்றுத் திறனாளி தந்தை கண்ணீர்...

எழுத்தின் அளவு: அ+ அ-

சொத்தை எழுதி வாங்கிக் கொண்டு வீட்டை விட்டு மகன் விரட்டி விட்டதாக மாற்றுத் திறனாளி தந்தை புகார் கூறியுள்ளார். மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் அவர் மனு அளித்துள்ளார். மகனின் ஈவு இரக்கமற்ற செயல் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு ...

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்ற பழமொழிக்கேற்ப வயதான பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது, சொத்துக்காக அவர்களை கொடுமைப்படுத்துவது விரட்டியடிப்பது போன்ற நெஞ்சை உறைய வைக்கும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர், தங்களுடைய முதுமை காலத்தில் சொத்துக்காக பிள்ளைகளால் உதாசீனப்படுத்தப்படும் கொடுமை இந்த கலி காலத்தில் தொடர் கதையாக இருந்து வருகிறது.

அப்படிப்பட்ட கல் நெஞ்சம் படைத்த மகன் ஒருவரின் கொடூர செயலை கண்டித்து காவல்நிலைய படியேறி இருக்கிறார் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி தந்தை ஒருவர்.

கரூர் மாவட்டம் ரெங்கநாதபுரத்தை அடுத்த நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர்  சக்திவேல்.. 68 வயதான இவர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றியவர். வித்தில் சிக்கி, வலது கை துண்டிக்கப்பட்ட இவருக்கு மனைவி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 

இந்நிலையில், அந்தப் பகுதியில் விலைக்கு வந்த ஐந்தரை ஏக்கர் நிலத்தை சக்திவேலின் மகன் வாங்க முயன்றுள்ளார். விலை அதிகமாக இருந்ததால் அதை வாங்கும் முயற்சியை மகன் கைவிட்டுள்ளார். ஆனால், நில உரிமையாளரிடம் பேசி விலையை குறைத்த சக்திவேல், தன் சேமிப்பில் இருந்த பணத்தை மகனிடம் கொடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில், சக்திவேல் கொடுத்து வைத்திருந்த பணத்தில் அந்த இடத்தை வாங்கிய மகன், அதை தன் பெயரில் பதிவு செய்துள்ளார். இதை தெரிந்து கொண்டு மகனிடம் கேட்டபோது, தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சக்திவேல். 

புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் மகனுடன் சமரசமாகச் செல்லுங்கள் என்று போலீசார் அனுப்பி வைத்து விட்டதாக வேதனை தெரிவித்த சக்திவேல், அடுத்தகட்டமாக மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்துள்ளார். மகன் பெயரில் பத்திரத்தை ரத்து செய்து, சொத்தை தனக்குப் பெற்றுத் தர வேண்டும் என்று அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மாற்றுத் திறனாளி தந்தையின் பணத்தில் வாங்கிய சொத்தை தன் பதிவு செய்து கொண்டதோடு மட்டுமின்றி, அவரை வீட்டை விட்டும் மகன் விரட்டிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day