எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் நீர்நிலைகளை தூர் வாரும் பணிக்காக விடப்பட்ட டெண்டரில் பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விளம்பர திமுக அரசுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்கள் மூலம் மக்கள் வரிப்பணம் சுரண்டப்பட்டது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
சிங்காரச் சென்னை 2.0 மற்றும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் 14 நீர்நிலைகளை தூர்வாரி அவற்றை புனரமைப்பதற்காக ஒப்பந்தங்கள் போடப்பட்டன. பெயரளவுக்கு மட்டுமே போடப்பட்ட இந்த ஒப்பந்தங்கள், முறையாக விண்ணப்பித்தவர்களுக்கு கிடைக்கவில்லை. அதற்கு மாறாக விளம்பர திமுக அரசின் உறவினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிங்காரச் சென்னை 2.0 மற்றும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் 14 நீர்நிலைகள் தூர்வாரி புனரமைக்கப்படுவதற்காக 20 கோடியே 47 லட்சம் ரூபாயை சென்னை மாநகராட்சி ஒதுக்கிய நிலையில், ஒப்பந்தமானது கடந்தாண்டு நிறைவடைந்தது. ஆனால் பணிகளை விளம்பர திமுக அரசின் உறவினர்கள் சரிவர செய்து முடிக்கவில்லை. இந்த டெண்டருக்கான பணிகள் ஒன்பது மாதங்களுக்குள் முடிய வேண்டும் விதி, ஒருவேளை ஒன்பது மாதங்கள் கடந்து சென்றால் அதற்கு முறையான விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும் தவறும் பட்சத்தில், மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இந்த விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், கொசப்பூர் குளம், புலிய கேணிகுளம், கிளிஞ்சல் குளம், பஞ்சாயத்து மெயின் ரோடு குளம் மற்றும் பெருமாள் கேனி குளம் ஆகியவற்றில் ஒரு சதவீதம் கூட பணிகள் நடைபெறாமல் இருப்பதை கண்டறிந்து அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் தெளிவு படுத்தியுள்ளது.
மணல் ஏரி, ஆமுல்லைவாயில் ஏரி, மாதவரம் பெரிய தோப்பு ஏரி, வண்ணான் குளம், பிள்ளையார் கோவில் குளம், மண்டபகுளம் ஆகியவற்றில் 50 சதவீதம் பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், மாத்தூர் பகுதியில் உள்ள கொசப்பூர் குளத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் கோத்ரேஜ் நிறுவனம் மற்றும் E.F.I. இந்திய சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு என்று என்.ஜி.ஓ. அமைப்பு இணைந்து குளத்தை தூர்வாரியுள்ளனர். அதுமட்டுமின்றி, குளத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர்களும் போடப்பட்டுள்ளன. இதனை வீடியோவாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மற்றும் என்.ஜி.ஓ. அமைப்பு தங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளன.
இந்த பணி முடிந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், அதே குளத்தை தூர் வாருவதற்காக மார்க்ஸ் கன்ஸ்டிரக்ஷன் என்கிற தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி சார்பில் 2 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள், குளத்தை தூர் வாராமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
குறிப்பாக சென்னையில் 14 நீர்நிலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் 5 நீர்நிலைகளில் எந்த வித பணிகளும் நடைபெறவில்லை. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் கள ஆய்வு மேற்கொண்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விவரங்களைப் பெற்று மாநகராட்சி அதிகாரிகள், மேயர், துறைசார்ந்த அமைச்சர், முதலமைச்சர் ஆகியோருக்கு புகார் மனு அளித்ததைத் தொடர்ந்தே மற்ற நீர்நிலைகளில் 50 சதவீத பணிகள் மட்டும் முடிக்கப்பட்டுள்ளன.
விளம்பர திமுக அரசுக்கு வேண்டியவர்கள் என்ற காரணத்தாலேயே, டெண்டர் காலம் முடிந்தும் பணிகளை நிறைவேற்றாத ஒப்பந்ததாரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை அறப்போர் இயக்கம் தெளிவு படுத்தி உள்ளது. மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத விளம்பர திமுக அரசு, ஆட்சிக்கு வந்த நாள் முதலே மக்களின் வரிப்பணத்தை சுரண்டுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.