மின் தேவையைப் பூர்த்தி செய்ய தவறும் விளம்பர திமுக அரசு - 1200 கோடி யூனிட் மின்சார உற்பத்தி பாதிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் வடசென்னை அனல்மின் நிலையத்தின் நிலை 3-ல், மின் உற்பத்தி தொடங்கப்படாமல் இருப்பதால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள், மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டும், இதுவரை அது செயல்படுத்தப்படாமல் இருப்பது விளம்பர அரசின் நாடகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ள நிலையில், இதுகுறித்த செய்தித் தொகுப்பை பார்ப்போம்...

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு என்ற கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு முதல் நிலையிலுள்ள மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட், 2-வது நிலையிலுள்ள இரு அலகுகளில் தலா 600 மெகாவாட் என மொத்தம் ஆயிரத்து 830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது

அதிகரிக்கும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கடந்த 2010-ம் ஆண்டு அங்கு 3-வது நிலையை அமைக்க அரசு திட்டமிட்டது. அதன்படி, 800 மெகாவாட் மின் உற்பத்தி திறனில் உயர்மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால், அதன் பிறகு 2021-ல் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானப் பணிகளில் தீவிரம் காட்டியது
 
ஒரு வழியாகப் பணிகள் நிறைவடைந்ததாக கூறி கடந்த ஆண்டு மார்ச் மாதம் விளம்பர திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மின் நிலையத்தை தொடங்கி வைத்தார். ஆனால், பல மாதங்கள் ஆகியும் வணிக ரீதியிலான மின் விநியோகம் தொடங்கப்படாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

கடந்த ஆண்டு நவம்பரில் இந்த திட்டப் பணிகளை ஆய்வு செய்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, 2024 டிசம்பர் மாதத்துக்குள் 3-ம் மின் நிலையத்தில் வணிக ரீதியிலான மின்னுற்பத்தியைத் தொடங்க வேண்டும்' என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மின் உற்பத்தி தொடங்கப்படாமல் இருப்பதை பார்க்கும் போது விளம்பர அரசின் நாடகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் வடசென்னை அனல்மின் நிலையம் கடந்த 11 மாதங்களில் இயங்கியிருந்தால் ஆயிரத்து 200 கோடி மின்சாரம் உற்பத்தியாகியிருக்கும்  என்றும், இதன் மூலம் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவது தவிர்க்கப்பட்டு, அரசுக்கு ஆண்டுக்கு 2 ஆயிரத்து 618 கோடி மிச்சமாகியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வடசென்னை அனல் மின்நிலையத்தின் தோல்விக்கு இதை விட வேறு சான்று தேவையில்லை என்று கடுமையாக சாடியுள்ள அன்புமணி, இந்த விவகாரத்தில்  உரிய பதில்களைத் தெரிவிக்காமல் மழுப்பலான பதில்களையே அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி வருவதாக குற்றம்சாட்டினார். மற்றொரு பக்கம் நிதி ஒதுக்குவதில் விளம்பர திமுக அரசு திட்டமிட்டே நாடகம் ஆடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து மின்வாரிய தொழிலாளரும், பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் பொதுச்செயலாளருமான சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, மின் நிலையத்தின் கட்டுமானப் பணியை மத்திய அரசின் பி.ஹெச்.இ.எல் நிறுவனமும், தனியார் நிறுவனம் ஒன்றும் இணைந்து செய்து வந்ததாகவும், ஆரம்பம் முதலே இந்த பணிகள் மந்தகதியில் நடந்து வருவதாகவும் தெரிவித்தார். 

இதனால் திட்டச் செலவுகள் அதிகரிப்பதோடு, தனியாரிடமிருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது ஏற்கெனவே கடனில் இருக்கும் மின்வாரியத்துக்கு தொடர்ந்து நஷ்டத்தைக் கொடுக்கும் எனவும் கூறினார். குறிப்பாக எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல அனல்மின் திட்டம், உடன்குடி அனல்மின் திட்டம், குந்தா நீரேற்று மின் திட்டம், உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் அனைத்தும் எப்போது முடியும் என்று தெரியவில்லை...

அந்த வகையில் வடசென்னை-3ம் நிலை பணியும் கடந்த 2010ம் ஆண்டு 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டமிட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முடிவுற்று, முதலமைச்சர் திறப்பு விழா நடத்தினார். ஓராண்டாகியும் மின் உற்பத்தி தொடங்காததால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆகவே விளம்பர திமுக அரசு மந்த கதியில் நடைபெறும் மின் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், வட சென்னை-3ம் நிலையில் மின் உற்பத்தியை உடனடியாக தொடங்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Night
Day