மீண்டும் உயரும் டோல்கேட் கட்டணம்...வாகன ஓட்டிகள் கலக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பல்வேறு சுமைகளில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இது மேலும் சுமையை அளித்துள்ளது குறித்து விவரி கலக்கமடைந்துள்ளனர்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டுதோறும், தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகள், 2008ன் படி மொத்த விலைக்குறியீட்டின் அடிப்படையில் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் மாற்றியமைக்கப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் முடிந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் சுங்கக்கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியது.

இந்த நிலையில், தற்போது செப்டம்பர் மாதத்திற்கான சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது என்றும், சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் மதுரை, தருமபுரி, கிருஷ்ணகிரி, உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர், நாதக்கரை, ஸ்ரீபெரும்புதுார், பாளையம், புதுார் பாண்டியபுரம், ஸ்ரீவைகுண்டம், வீரசோழபுரம், வேலன்செட்டியூர், விஜயமங்கலம், சென்னசமுத்திரம், எலியார்பதி, கொடை ரோடு, மேட்டுப்பட்டி, மொரட்டாண்டி, பரனுர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உட்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day