எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக வீடுகளை காலி செய்ய விளம்பர திமுக அரசு கெடுபிடி காட்டுவதால், சின்ன உடைப்பு கிராம மக்கள் நாடோடிகளாக திரியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தங்களுக்கான மறுகுடி அமர்வு வீடுகள் ஒதுக்கும் வரும் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள கிராம மக்கள், ஆட்சியாளர்கள் தங்களை ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆட்சிக்கு வரும்முன்பு ஒரு பேச்சு.. ஆச்சுக்கு வந்தப்பின் மறுபேச்சு என்பதுபோல் பொய்வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, தற்போது கொடுங்கோல் ஆட்சிப்போல மக்களை வஞ்சித்து வருகிறது. இதனால் கொதிப்படைந்துள்ள மக்கள், போராட்டங்களில் குதிப்பதையும் காணமுடிகிறது.
ஒருபக்கம் பட்டா வழங்கக்கோரி முல்லை நகர் மக்கள் போராட்டம் - மறுபக்கம் சாதிச் சான்றிதழ் கேட்டு பழங்குடியினர் போராட்டம் என ஏதோவொரு கோரிக்கைக்காக மதுரை மாநகரம் சுற்றியும் போராட்டக்களமாக மாறியுள்ளது. அந்த வரிசையில், புதிதாக சின்ன உடைப்பு கிராம மக்களின் போராட்டமும் இணைந்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டங்களை தொடர்ந்து அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாக மதுரை விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக முடிவு செய்யப்பட்டது. அதன் விரிவாக்க பணிகளுக்காக 633.17 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, சின்ன உடைப்பு கிராமத்திற்கு அதிகாரிகள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நிலம் கையகப்படுத்தும் வகையில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மறுகுடியமைப்புக்கு முறையான வசதிகள் செய்து தராத விளம்பர திமுக அரசை கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி, தீக்குளிக்க போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தை தொடர்ந்து, அவசர உதவிக்காக இரண்டு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
குடியிருப்புகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், சாலையில் குடியேறி சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களில், 6 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். தங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக மண்ணைவாரி தூற்றி மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து சின்ன உடைப்பு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அமைச்சர் தூண்டுதலின்பேரில் மாவட்ட ஆட்சியர், வீடுகளை அகற்ற முயற்சிப்பதாகவும், சட்ட விரோதமாக இடத்தை அபகரிப்பது போல அரசு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மறுகுடி அமர்வுக்கு தங்களுக்கான கால அவகாசம் வேண்டும் என சின்ன உடைப்பு கிராம மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், வீடுகளை காலி செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தெரிவித்தார்.
இதனால் கொந்தளித்துப்போன சின்ன உடைப்பு மக்கள், அமைச்சர் மூர்த்தி 3 மணி நேரமாக வீட்டு வாசலிலே காக்க வைத்து தங்களை ஏமாற்றிவிட்டதாகவும், முதலமைச்சர், அமைச்சர், மாவட்ட ஆட்சியர் என அனைவரும் தங்களை ஏமாற்றி விட்டதாகவும், மாற்று இடத்தில் வீடுகள் தரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
சின்ன உடைப்பு மக்களுக்கு முறையாக குடியிருப்புகளை ஒதுக்கி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விளம்பர திமுக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.