வெறிபிடித்த ராட்வீலரை ஏவிய ஓனர்... முதிய தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ராட்வீலர் நாய் ஒன்று முதிய தம்பதியை கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாயை மெயின்ரோடு வழியாக வாக்கிங் கூட்டிட்டு போங்க என்று சொல்லிய ஒரே காரணத்துக்காக, திட்டமிட்டு நாயை ஏவி முதியவரை கடிக்க வைத்த கொடூர சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. 

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த ஆண்டு மே மாதம் மாநகராட்சி பூங்காவில் 5 வயது சிறுமியை 2 ராட்வீலர் நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாங்காடு பகுதியிலும் 11 வயது சிறுவன் ராட்வீலர் நாய் கடியால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக தமிழக அரசு ராட்வீலர் உள்ளிட்ட 23 வெளிநாட்டு வகை நாய்களுக்கு தடை விதித்தது. 

இருப்பினும் சென்னை மாநகராட்சி இதுபோன்று வெளிநாட்டு நாய்கள் உள்ளிட்ட வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் பல நாய் உரிமையாளர்கள் மாநகராட்சியின் விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கொளத்தூரில் ராட்வீலர் நாயை ஏவி விட்டு முதிய தம்பதியை கடிக்க வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

கொளத்தூர் புத்தாகரம் பகுதியை சேர்ந்த கவியரசு என்பவர், தனது ராட்வீலர் நாயை தினமும் அப்பகுதியில் வாக்கிங் அழைத்து செல்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியில் உள்ள மாரியப்பன் என்பவர் மெயின் ரோடு பகுதியில் நாயை வாக்கிங் அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனை மனதில் வைத்திருந்த கவியரசு, மாரியப்பன் அவர் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது நாயை அழைத்து சென்று அவரை கடிக்க ஏவி விட்டுள்ளார். 

அச்சத்தில் பயந்து ஓடிய மாரியப்பனையும், அவரது மனைவியையும் நாய் கடித்துக் குதறிய போதும் நாயின் உரிமையாளர் கவியரசு வேடிக்கை பார்த்ததோடு, தொடர்ந்து நாயை ஏவி விட்டுள்ளார். மாரியப்பனை துரத்திய நாய் அவரது துணியை கடித்து இழுத்து நிர்வாணமாக்கியது. இதனைக் கண்ட ரமேஷ் என்பவர் கவியரசுவை தட்டிக்கேட்டுள்ளார். ஆனால் வெறிபிடித்த கவியரசு அவர் மீதும் நாயை ஏவியுள்ளார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று கூடி கேட்ட போது, கவியரசு தனக்கு சென்னை புழல் காவல் நிலையத்தில் உயர் அதிகாரியையும் வழக்கறிஞர்களையும் தெரியும் எனக் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட ரமேஷ் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளுடன் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்க எடுக்காமல் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தினந்தோறும் நடைபயிற்சி அழைத்துச் செல்கிறேன் என்ற பேரில் நாயை வைத்து மக்களுக்கு இடையூறு அளிக்கும் அதன் உரிமையாளர்கள் மீது சென்னை மாநகராட்சி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் ஜெயா பிளஸ் தொலைக்காட்சி வாயிலாக கோரிக்கை வைத்துள்ளனர்.

Night
Day