எழுத்தின் அளவு: அ+ அ- அ
தெலங்கானாவில் 86 வயதான தொழிலதிபரை அவருடைய பேரனே 73 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சொத்து தகராறில் ஏற்பட்ட இந்த கொடூர கொலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு ...
ஆந்திர மாநிலம் ஏலூரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜனார்த்தன் ராவ். 86 வயதான இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். வேல்ஜன் குரூப் என்ற பெயரில் பல்வேறு தொழில் நிறுவனங்களை ஜனார்த்தன் ராவ் நிர்வகித்து வந்தார். கடந்த சில வருடங்களாக ஹைதராபாத்தில் உள்ள சோமாஜுகுடாவில் வசித்து வந்தார் ஜனார்த்தன் ராவ்.
சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய மூத்த மகளின் மகனான ஸ்ரீ கிருஷ்ணாவை வேல்ஜன் குழுமத்தின் இயக்குனர்களில் ஒருவராக நியமித்தார் ஜனார்த்தன் ராவ். அதே நேரத்தில் தன்னுடைய இரண்டாவது மகளான சரோஜினி தேவியின் மகன் கீர்த்தி ராஜுக்கு தன்னுடைய நிறுவனத்தின் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வழங்கினார் ஜனார்த்தன் ராவ்.
ஆனால் தன்னையும் குடும்ப நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக நியமிக்க வேண்டும் என்று கீர்த்தி ராஜ் தன்னுடைய தாத்தாவிடம் கேட்டுள்ளார். ஆனால் கீர்த்தி ராஜ் கோரிக்கையை ஏற்க ஜனார்த்தன ராவ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக குடும்பத்தில் கடந்த சில நாட்களாக பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், குடும்ப நிறுவனத்தில் இயக்குனர் பதவி கேட்டு, மகன் கீர்த்தி ராஜுடன் தாயார் சரோஜினி தேவி தந்தையை சந்திக்க சோமாஜுகுடா வந்தார். அப்போது தந்தைக்கு மகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முற்றி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
குடும்ப நிறுவனத்தில் தனக்கு இயக்குனர் பதவி வழங்க வேண்டும் என்று தாத்தா ஜனார்த்தன் ராவிடம் கீர்த்தி ராஜ் கடுமையாக வாதிட்டார். அப்போது இருவரும் பொறுமையாக பேசிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு டீ போட்டு வருவதற்காக சரோஜினி தேவி வீட்டில் உள்ளே சென்றார்.
அப்போது கீர்த்தி ராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தாத்தா ஜனார்த்தன் ராவை 73 முறை கத்தியால் குத்தினார். சத்தம் கேட்டு வெளியில் ஓடி வந்த சரோஜினி தேவி, தனது தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்யும் மகனை தடுக்க முயன்றார். அப்போது சரோஜினி தேவிக்கும் கத்திக் குத்து விழுந்தது.
இதைப் பார்த்த அங்கிருந்த காவல்காரர் கூச்சலிட்டதை கேட்டு ஓடிவந்த அக்கம் கீர்த்தி ராஜை பிடித்து தர்ம அடி கொடுத்த போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதற்கிடைய சரமாரியாக கத்திக் குத்து விழுந்த ஜனார்தன் ராவ், ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தார். தகவறிந்து வந்த போலீசார் கீர்த்தி ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பேரனால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த ஜனார்த்தன் ராவ் ஏலூரில் உள்ள அரசு மருத்துவமனை மேம்பாட்டு பணிகளுக்காக 40 கோடி ரூபாய், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு 40 கோடி ரூபாய் வழங்கிய கொடையாளர் என்பதும், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பெருமளவில் நிதியுதவி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் வசித்துவந்த கீர்த்தி ராஜு அண்மையில்தான் சொந்த ஊர் திரும்பி வந்துள்ளார். அங்கு இருந்தபோது அவர் போதை பழக்கத்திற்கு ஆளாகி அதற்கு அடிமையாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சொத்து தகராறில் பிரபல தொழிலதிபர் பேரனால் பல முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.