எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், பஹல்காம் தாக்குதல் முட்டாள் தனமான வன்முறை செயல் என்றும் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடும் கொடூரம், மனிதாபிமானமற்ற தன்மையைக் கடுமையாக நினைவூட்டுவதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மகுடமான காஷ்மீரின் இயற்கை அழகை அனுபவித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல், சந்தேகத்திற்கு இடமின்றி மனிதகுலத்தின் மதிப்புகள் மற்றும் வாழ்க்கையின் புனிதத்தன்மைக்கு எதிரான தாக்குதல் என குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றம், இந்த தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிட அஞ்சலி செலுத்தினர்.