சென்னை பரங்கிமலையில் ரயில் முன் மாணவி தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் என்பவரும் காதலித்து வந்தனர். பெற்றோரின் கடும் எதிர்ப்பால் சதீஷுடன் பேசுவதை சத்யபிரியா நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரத்தில் இருந்த சதீஷ், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி, பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்த சத்யப்பிரியாவை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சதீஷை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளி சதீஷூக்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன், 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்ணின் குடும்பத்தினருக்கு, 10 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.