எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரை பெருங்குடியில் காவலர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் வில்லாபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
மதுரை பெருங்குடியில் காவலர் மலையரசன் எரித்துகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையா? தற்கொலையா? என பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் மலையரசன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக வில்லாபுரத்தை சேர்ந்த மூவேந்தர் என்ற ஆட்டோ ஓட்டுனரை போலீசார், துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மேலும் பணத்திற்காக காவலரை எரித்துக் கொன்றதாக ஆட்டோ ஓட்டுநர் மூவேந்தர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மலையரசன் ஆட்டோவில் சவாரி சென்ற போது ஏற்பட்ட பழக்கத்தில் இருவரும் சேர்ந்து பெருங்குடி அருகே காட்டு பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது காவலர் மலையரசனிடம் பணத்தை பறித்த போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆட்டோ ஓட்டுனர் மூவேந்தர், காவலர் மலையரசனை தலையில் அடித்து கொலை செய்து எரித்து பெருங்குடி அருகே வீசி சென்றது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மூவேந்தரை கைது செய்ய முயன்ற போது சார்பு ஆய்வாளர் மாரிக்கண்ணன் என்பவரை கையில் வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது மூவேந்தரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். இதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூவேந்தர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டநிலையில் காயமடைந்த சார்பு ஆய்வாளர் மாரிக்கண்ணனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.