எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மாதவரம் செல்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த இளம்பெண்ணை ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஓட்டுநர் ஏற்றியதாக கூறப்படுகிறது. பின்னர் வண்டலூரில் ஆட்டோவில் ஏறிய இருநபர்கள், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனை மெசேஜ் மூலம் அறிந்துக்கொண்ட பெண்ணின் தோழி, உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், இளம்பெண்ணின் செல்போன் சிக்னலை வைத்து குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆட்டோவை போலீசார் பின்தொடர தொடங்கினர். போலீசார் துரத்துவதை அறிந்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட மூவரும், இளம்பெண்ணை மதுரவாயல் அருகே இறக்கிவிட்டு தப்பிச்சென்றனர். உடனடியாக இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீசார், இந்த செயலில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்செல்வன் மற்றும் தயாளன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என கூறப்படுகிறது.