எழுத்தின் அளவு: அ+ அ- அ
வேலூர் அருகே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தண்டனைக் கைதி தப்பியோடிய விவகாரத்தில் 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மத்திய சிறையில் பாபு ஷேக் என்பவர் ஆயுள் கைதியாக தண்டனை பெற்று வருகிறார். அவருக்கு உடல்நிலை நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கை விலங்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், காவலர்கள் அசந்த நேரத்தில் கை விலங்கை கழற்றிவிட்டு, பாபு ஷேக் தப்பிச் சென்றார். இதனை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சி மற்றும் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு செய்து தப்பியோடிய கைதி பாபு ஷேக்கை தேடி வந்தனர்.
இதனிடையே, கைதி தப்பியோடி விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக பாதுகாப்பு பணியில் இருந்த பொற்கை பாண்டியன், கோகுல், சத்தியமூர்த்தி, கண்ணண் உள்ளிட்ட 4 காவலர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் தப்பியோடிய ஆயுள் தண்டனை கைதி பாபு ஷேக்கை, வேலூர் மாவட்டம் சித்தேரி பகுதியில் இருந்த போது தனிப்பிரிவு போலீசார் மடக்கிப் பிடித்து மீண்டும் கைது செய்தனர்.