எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று ஒரு மணி நேரத்தில் நிகழ்ந்த 7 நகை பறிப்பு சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காலையில் நடைபயிற்சி செல்லும் மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட உத்தரபிரதேச கொள்ளையர்களை சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னையில் இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை ஒரு மணி நேரத்தில் 7 மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. அடையாறு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் மட்டும் 6 மூதாட்டிகளிடம் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். சைதாப்பேட்டையில் இந்திரா என்பவரிடம் ஒன்றரை சவரன் செயின், சாஸ்திரி நகர் அம்புஜம்மாளிடம் ஒன்றரை சவரன், திருவான்மியூரில் லட்சுமி அம்மாள் என்பவரிடம் எட்டு சவரன், கிண்டியில் நிர்மலா என்பவரிடம் 10 சவரன், வேளச்சேரியில் விஜயா என்பவரிடம் இரண்டு சவரன், முருகம்மாள் என்பவரிடம் 3 சவரன் செயின்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இவர்களில் 5 பேர் காலையில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காலையில் பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்ற ஒருவரிடமும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது மூதாட்டிகளிடம் கைவரிசை காட்டியது உத்திர பிரதேசத்தை சேர்ந்த கொள்ளையர்கள் என்பது தெரியவந்துள்ளது. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான கொள்ளையர்களின் உருவப்படத்தை சென்னை மாநகரிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்கள் தப்பிவிடாமல் இருக்க சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையங்கள், ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.