நிலப்பிரச்சினை - கொல்லப்பட்ட ஓய்வு எஸ்ஐ ஜாகீர் உசேன் மகன் குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்பர திமுக அரசு குற்றவாளிகளை தப்பிக்க வைக்க ஆர்வம் காட்டி வருவதாக நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மகன் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் பிஜிலி, காவல் உதவி ஆய்வாளராகவும் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அவரது பாதுகாப்புப் பிரிவிலும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவராவார். இவர் கடந்த 18-ம் தேதி காலையில் பள்ளிவாசலில் தொழுகை முடிந்து விட்டு வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் அவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர்.

முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து என அவர் வீடியோ வெளியிட்ட நிலையில் நடந்த இந்தக் கொலை மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதனிடையே கொலை தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவ்பீக் என்பவரை போலீசார் சுட்டுப் பிடிக்க, கார்த்திக், அக்பர் ஷா ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கொலைக்கு உதவிய 17 வயது சிறுவன் ஒருவனும் கைது செய்யப்பட்டார். 

இந்தநிலையில், முக்கிய குற்றவாளி கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர் நிஷாவை இதுவரை கைது செய்யாமல் இருப்பதாகவும், தமிழக அரசு குற்றவாளிகளை தப்பிக்க வைக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் குற்றம் சாட்டி ஜாகிர் உசேனின் மகன் உசூர் ரகுமான் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ரகுமானின் இந்த வீடியோவைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு வந்த போலீசாரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே ஜெயா பிளஸ் செய்தி எதிரொலியாக ஜாகிர் உசேன் பிஜிலி வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் பிஜிலியின் மகன் உசூர் ரகுமான், தமிழக அரசு குற்றவாளிகளை காப்பாற்றுவதில் முனைப்பு காட்டுவதாகவும், அடுத்து தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கூறும் வீடியோவை பகிர்ந்து நமது ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதையடுத்து ஜாகிர் உசேன் பிஜிலி வீட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவரது வீட்டிற்கு தற்போது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Night
Day