எழுத்தின் அளவு: அ+ அ- அ
கோவை மாவட்டத்தில் உயர்ரக போதைப்பொருள் விற்பனை செய்த காவல் உதவி ஆய்வாளர் மகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகரில் போதை பொருள் தடுப்பு தொடர்பாக காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை போலீசார் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மேட்டுப்பாளையம் ரோடு பூமார்க்கெட் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து கொகைன், கிரீன் கஞ்சா, குஷ், உலர்ந்த கஞ்சா, 25 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், மதுபாட்டில்கள், 3 கார்கள், 12 செல்போன்கள் உள்ளிட்ட 70 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், மணிகண்டன் என்பவர், மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த போதைப்பொருட்களை பெற்று விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் விற்பனை மூலம் கோவைப்புதூரில் வீடு கட்டி வருவதும்,காரமடை டீச்சர்ஸ் காலனி பகுதியில் புதிய வீடு மற்றும் வீட்டு மனை வாங்கியதும் தெரிய வந்துள்ளது. இந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். போதை பொருள் விற்றதாக கைதான 7 பேரில் மகாவிஷ்ணு என்பவர் கோவை மாவட்ட பொருளாதர குற்றப்பிரிவு பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் விஜய் லட்சுமியின் மகன் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் கூறுகையில், தமிழகம் முழுவதும் போதைபொருட்கள் கொரியர் மூலம் அனுப்பி விற்பனை செய்தது தெரியவந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், கைதானவர்கள் கோவை, ஊட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் ஐ.டி., ஊழியர்கள்,கார் ஓட்டுநர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.