எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். பெண்ணின் ஆடை தான் பாலியல் குற்றத்திற்கு காரணம் என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சிறப்பு விசாரணைக்குழு அமைக்க உத்தரவிட்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கோரியிருந்த விரிவான அறிக்கையை சீலிட்ட கவரில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்தது.
வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்த அண்ணா பல்கலைக்கழகம், தாங்கள் பாதிக்கபட்ட பெண்ணின் பக்கம் நிற்பதாகவும், 988 கேமராக்கள் உள்ள பல்கலைக்கழகத்தில் 849 செயல்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. சம்பவத்துக்கு பின்பு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டதாகவும், பாதிக்கபட்ட பெண்ணுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளதாகவும், போலீஸ் விசாரணைக்கு அண்ணா பல்கலை முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்டிருக்கும் விதம் மிக மோசமாக உள்ளதாக அதிருப்தியை தெரிவித்தனர். பெண்ணின் ஆடை தான் பாலியல் குற்றத்திற்கு காரணம் என எப்.ஐ.ஆரில் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், எவ்வாறு அப்படி கூற முடியும் என்றும் காட்டமாக கேள்வி எழுப்பினர். இணையத்தில் முதல் தகவல் அறிக்கை முடக்கப்பட்ட பிறகும், 14 பேர் பார்த்தது எப்படி என கேள்வி எழுப்பிய நிதிபதிகள், காவல்நிலையத்திற்கு வருவதற்கே பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளதாக அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
எப்.ஐ.ஆர். தகவல்களை வெளியிட்ட ஊடகங்கள் பதில் கூற வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ஊடகங்களால் தான் இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிவித்தனர். வழக்கின் விசாரணை முதற்கட்ட நிலையில் உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அரசியல் சாயம் பூச வேண்டாம் என நீதிபதிகள் கூறினர். ஆண் என்பதற்காக, பெண்களை தொட உரிமை இல்லை எனவும் பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பதை சமுதாயம் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
அரசு அனுமதியின்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி தகவல்களை கசியவிட்ட காவல் ஆணையருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், மாணவிக்கும், அவரின் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க டிஜிபிக்கு உத்தரவிட்டனர். மேலும் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பாதிக்கபட்ட பெண்ணுக்கு 25 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதனிடையே அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநரான ஆர்.என் ரவி ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக, பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இனி வரக்கூடிய நாட்களில் என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தலாம் என்பது குறித்தும் பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர் அமைப்புடன் பேசி அவர்களின் கருத்துக்களை கேட்டு அறிந்தார்.