எழுத்தின் அளவு: அ+ அ- அ
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே பொதுக்குழு கூட்டத்தின் மேடையிலேயே ஏற்பட்ட வார்த்தை மோதலால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கெளரவத் தலைவர் ஜி.கே மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் வருங்கால திட்டங்கள் குறித்து ராமதாஸ் கேட்டறிந்து வந்தார்.
இந்த நிலையில் பாமக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார். ஆனால் அதற்கு அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியில் இணைந்த 4 மாதத்திலேயே பொறுப்புகள் வழங்கப்படுவதாக அன்புமணி மேடையிலேயே குற்றம் சாட்டினார். கட்சியில் இத்தனை காலமாக உழைத்தவர்கள் மேலும் பாமகவை குடும்ப கட்சியாக மாற்ற முயற்சியா என்று அன்புமணி காட்டமாக தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் பேசிய ராமதாஸ் கட்சியை உருவாக்கியவன் நான், வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான், முடிவை நான் தான் எடுப்பேன், நான் எடுத்த முடிவுதான் கட்சியின் முடிவு, விருப்பம் இல்லாதவர்கள் யாராகினும் கட்சியிலிருந்து வெளியேறலாம் என ராமதாஸ் அன்புமணிக்கு மேடையிலேயே தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
அடுத்து பேசிய அன்புமணி, பனையூரில் புதிதாக கட்டியுள்ள தனது அலுவலகத்திற்கு வந்து தொண்டர்கள் தன்னை சந்திக்கலாம் என தெரிவித்ததால் நிர்வாகிகள் குழப்பமடைந்தனர்.
பாமக கட்சியின் இளைஞர் அணி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள முகுந்தன் மருத்துவர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.