முதல்நாள் வாக்குவாதம்... மறுநாள் அரிவாள் வீச்சு... முளைப்பாரி திருவிழாவில் இளைஞர்கள் களேபரம்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த முளைப்பாரி ஊர்வலத்தில் இரண்டு இளைஞர்கள் சேர்ந்து ஒரு இளைஞரை அரிவாளால் தாக்கிய கொடூர சம்பவம் புதுக்கோட்டையில் அரங்கேறி உள்ளது. நேற்றைய வாக்குவாதம் இன்று இருதரப்பு பிரச்னையாக உருவெடுத்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

நாட்டுக்காக வாளை ஏந்தி போரிட்ட காலம் போயி... இப்போதெல்லாம் சிறிய பிரச்னைக்கே அரிவாளை எட்றா.... வெட்றா என்பதுபோல காலம் மாறிவிட்டதோ என்ற சந்தேகம்தான் இந்த இரண்டு இளைஞர்களும் சேர்ந்து அரிவாளைக்கொண்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தை கண்டால் ஏற்படுகிறது. 

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் நாகராஜன் மற்றும் சுந்தர்ராஜ். இவர்கள் இருவரும் கடந்த 10ம் தேதி இரவு புதுக்கோட்டையிலிருந்து திருக்கட்டளை செல்லும் சாலையின் நடுவே தங்களின் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, சாவகாசமாக பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. 

அப்போது அவ்வழியாக காரில் வந்த, மேலக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், நடுரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருப்பதை கண்டு ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், எங்க ஏரியாவுல வந்து எங்கள பாத்து ஹாரன் அடிக்கறது என குரல் கொடுக்க... பைக்கை நடுரோட்டில் நிறுத்திவைத்தால் ஹாரன் அடிக்காம என்னடா பண்ணுவாங்கணு பதிலுக்கு மணிகண்டன் ஆவேசப்பட, அங்கு மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

பின்னர் அங்கு வந்த பொதுமக்கள், பிரச்னைலாம் வேண்டாம் அமைதியாக செல்லுங்கள் என அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் தான், இந்த சம்பவம் நடந்த மறுநாளான செவ்வாய்கிழமை, நாகராஜன் மற்றும் சுந்தர்ராஜ் வசிக்கும் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. 

அந்த ஊர்வலத்தில் தனது குடும்பத்தினருடன் மணிகண்டன் பங்கேற்றதை கண்ட நாகராஜன் மற்றும் சுந்தர்ராஜ், நேற்றைய வாக்குவாதத்தை மனதில் வைத்து மணிகண்டனை தீர்த்துக்கட்ட துணிந்தனர்.  

இதற்காக தங்களின் வீடுகளில் இருந்து அரிவாளை எடுத்து வந்து, மணிகண்டன் அருகாமையில் சென்ற இருவரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளைக்கொண்டு வெட்ட முயன்றனர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட மணிகண்டன், எப்படியோ அவர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் ஒன்றுகூடி நாகராஜனையும், சுந்தர்ராஜாயும் தடுத்து நிறுத்தினர்.

இதில் லேசான காயத்துடன் மணிகண்டன் தப்பிய நிலையில், உடனடியாக மூவரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய ஊர்மக்கள், சண்டைபோடுவதை விட்டுட்டு சமாதானமாக செல்லக்கூறி பஞ்சாயத்து செய்து அனுப்பி வைத்தனர். பேசித் தீர்த்தால் எந்த பிரச்னையாக இருந்தாலும் தீர்ந்துவிடும் என்பது அனைவரும் அறிந்ததே... அதை விட்டுவிட்டு சிறிய பிரச்னைக்கெல்லாம் அரிவாளைக்கொண்டு மாஸ் காட்டலாம் என நினைத்தால்... போலீஸ் கேஸ் தான் மிஞ்சும்...


Night
Day