ரூ.10 கோடி நிலம் அபகரிப்பு... திமுக கவுன்சிலருக்கு உடந்தையாக போலீஸ்... நல்லா இருக்கு சார் உங்க சட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் மணிவிழுந்தான் அருகே 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை வாழப்பாடி திமுக ஒன்றிய கவுன்சிலர் அபகரித்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிலத்தை அபகரித்தது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்க, போலீஸ் பாதுகாப்போடு அபகரித்தரித்த விளை நிலத்தில் மண்ணை கொட்டி அட்ராசிட்டியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுக்கா மணிவிழுந்தான் அருகே பிரதான சாலையை யொட்டி 90 செண்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலம் பொன்சாமி கவுண்டர் என்பவருக்கு சொந்தமானது என கூறப்படும் நிலையில் வாழ்ப்பாடியை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் சக்கரவர்த்தி, பொன்சாமி கவுண்டரை ஏமாற்றி நிலத்தை அபகரித்துவிட்டதாக அவரது வாரிசுதாரர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். 

நிலத்தின் உரிமையாளரான பொன்சாமி கவுண்டருக்கு ராஜேந்திரன், இந்திராணி உட்பட மொத்தம் 9 வாரிசுகள் இருக்க, வாரிசுகளின் ஒப்புதலே இல்லாமல் பொன்சாமி கவுண்டரை மூளைச்சலவை செய்து ஏமாற்றி திமுக கவுன்சிலர் சக்ரவர்த்தி நிலத்தை அபகரித்துக்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 


பொன்சாமி கவுண்டரின் பெயரில் இருந்த 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 90 சென்ட் நிலம் திமுக கவுன்சிலர் சக்கரவர்த்தியின் பினாமி என கூறப்படும் ஆறுமுகம் என்பரின் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வாரிசுகளின் ஒப்புதல் கையெழுத்து இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட பத்திரப்பதிவு செல்லாது என கூறியும், வயது முதிர்ந்த தந்தையை ஏமாற்றி நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி திமுக கவுன்சிலர் சக்கரவர்த்திக்கு எதிராக வாரிசுதாரர்கள் தரப்பில் ஆத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. 

இந்தநிலையில் தான் அபகரிக்கப்பட்டதாக கூறப்படும் 90 சென்ட் நிலத்தில் மண்ணை கொட்டி அராஜகத்தில் ஈடுபட்டிருக்கிறார் திமுக கவுன்சிலர் சக்கரவர்த்தி. காவல் ஆய்வாளரின் தலைமையில் பெரும் போலீஸ் படையின் பந்தோபஸ்துக்கு மத்தியில் பயிர்கள் முளைத்து நிற்கும் விவசாய நிலத்தில் லாரி மூலம் மண் கொட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாரிசுதாரர்கள் போலீசாரால் குண்டுக்கட்டாக தடுக்கப்பட்டு ஆராஜகம் அரங்கேறிய காட்சிகளும் வெளியாகியுள்ளது. 

நீதிமன்றத்தில் வழக்கு நிலுலையில் உள்ளதாக நிலத்தின் வாரிசுதாரரான ராஜேந்திரன் போலீசாரிடம் கூறிய போதும் அதை சற்றும் பொருட்படுத்தாமல் அவரை கைது செய்து நாள் முழுவதும் காவல்நிலையத்தில் அடைத்து வைத்த போலீசார், இரவு 11 மணிக்கே விடுவித்ததாக தெரிகிறது. நிலம் தொடர்பான விவகாரத்தில் திமுக கவுன்சிலருக்கு ஆதரவாக ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் கந்தவேல் பகிரங்க மிரட்டல் விடுப்பதாகவும் வாரிசுதாரரான ராஜேந்திரன் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 


இதற்கெல்லாம் உச்சமாக தற்போது ராஜேந்திரன் காணவில்லை என்றும் கணவரை மீட்டுத்தரக்கோரியும் மாவட்ட எஸ்.பி. இடம் புகார் அளித்திருக்கிறார் ராஜேந்திரனின் மனைவி. திமுக கவுன்சிலர் சக்கரவர்த்தியே தனது கணவரை கடத்தியிருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்த அவர், கணவரை மீட்டுத்தாருங்கள் என கண்கள் குளமாக கோரிக்கை வைத்தது அராஜக திமுக ஆட்சியின் உச்சக்கட்ட போக்கை காட்டும் விதமாக இருந்தது.

திமுக கவுன்சிலர் சக்ரவர்த்தி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில் விவசாய நிலம் என்றும் பாராமல் விளைந்து நிற்கும் பயிர்கள் மீது மண்ணை அள்ளிக்கொட்டி களைக்கொல்லி மருந்து தெளித்து அராஜகத்தில் ஈடுபட்டதோடு, எதிர்ப்பவர்களை கடத்தியிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அராஜக திமுக ஆட்சியின் அவலம் என்றே சொல்லவேண்டும்.

திமுக ஆட்சிகாலங்களில் நில அபகரிப்பின் ஆட்ராசிட்டிகள் தலைத்தூக்கியிருக்கும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கும் நிலையில் புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. 

Night
Day