எழுத்தின் அளவு: அ+ அ- அ
அரிசி கடையில் பட்டப்பகலில் திரைப்பட பாணியில் சாம்பிள் அரிசி கேட்டு விட்டு கடைக்காரர் உள்ளே சென்றபோது கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் சென்ற இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வடிவேலு தனது சகாக்களுடன் அரிசிக் கடைக்கு வருவார். அப்போது கடை உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி, அரிசி வாங்குவது போல நடித்து எடைக்கல்லையும், தராசையும் திருடிவிட்டு தப்பித்துச் செல்வார். இந்த நகைச்சுவை காட்சியைப் போல ஈரோடு மாவட்டம், பவானி அருகே அரிசிக்கடையில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள லட்சுமி நகரைச் சேர்ந்தவர் மோகன். இவர் பவானி - சத்தியமங்கலம் சாலையில் தளவாய்பேட்டை பகுதியில் ஸ்ரீ ஜெய் ஆஞ்சநேயா என்ற பெயரில் அரிசி கடை நடத்தி வருகிறார். கடையில் அவரது உறவினரான இளையம்மாள் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் புதன் கிழமை காலை 10 மணிக்கு வழக்கம்போல கடையை திறந்து இளையம்மாள் அரிசி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அரிசி கடைக்கு இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
கடை ஊழியர் இளையம்மாளிடம் கடையில் விற்கப்படும் அரிசி ரகங்கள் குறித்தும், அதன் விலை குறித்தும், எவ்வளவு நேரம் அரிசியை வேக வைக்க வேண்டும் என்பது குறித்தும் கேட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து உள்ளே சென்று சாம்பிள் அரிசியை எடுத்து வரும்படி இளைஞர்கள் கூறியுள்ளனர். அதனால், இளையம்மாள் உள்ளே சென்று சாம்பிள் அரிசி எடுத்துக் கொண்டு கடையின் முன்புறம் வந்தபோது, அந்த இரண்டு இளைஞர்களும் இல்லை. சந்தேகமடைந்த இளையம்மாள், கல்லாப்பெட்டியை பார்த்தபோது இதில் இருந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆப்பக்கூடல் போலீசார், அரிசிக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் வீடியோக்களை ஆய்வு செய்தனர்.
அந்த வீடியோ ஆதாரம் மூலம் அரிசிக்கடையில் பணம் திருடிவிட்டு தப்பியோடிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கடைவீதியில் நடந்த பணம் திருட்டு சம்பவம், வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.