எழுத்தின் அளவு: அ+ அ- அ
கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்து சமையல் எரிவாயு கசிந்ததால் பதற்றம் நிலவியது. பாதுகாப்பு கருதி அருகிலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 20 மெட்ரிக் டன் எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டருடன் கோவை கணபதி பகுதியில் உள்ள சமையல் எரிவாயு பிடிக்கும் தொழிற்சாலைக்கு டேங்கர் லாரி ஒன்று வந்தது. இன்று அதிகாலை உப்பிலிபாளையம் மேம்பாலம் மேலே வரும் பொழுது அந்த லாரியின் ஆக்ஸில் உடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதையடுத்து லாரியில் இருந்த தனியாக பிரிந்து மேம்பாலத்தில் உருண்ட டேங்கரில் இருந்து சமையல் எரிவாயு கசிய தொடங்கியது.
சமையல் எரிவாயு கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க, டேங்கரில் இருந்து கசிந்த எரிவாயு மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவணன் சுந்தர், விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் 18 டன் சமையல் எரிவாயு இருப்பதாக கூறினார். பாதுகாப்பு கருதி, விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். விபத்து நடந்த இடத்திற்கு அருகாமையில் 500 மீட்டர் தூரத்தில் உள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
5 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்த மீட்பு பணிகளையடுத்து எரிவாயு கசிவு கட்டுப்படுத்தப்பட்டது. இதையடுத்து விபத்து ஏற்பட்ட வாகனத்தை பீளமேடு கேஸ் குடோன் பகுதிக்கு எடுத்து செல்லும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக திருச்சியில் இருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்படுகிறது. இதனிடையே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் முன் பள்ளிக்கு சென்ற மாணவர்களை அவர்களது பெற்றோர் அழைத்து சென்றனர்.