சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் கிழிப்பு - சலசலப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பான விசாரணைக்கு சீமான் ஆஜராகாததால் அவரது வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர். அந்த சம்மனை கிழித்ததுடன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சீமான் வீட்டு காவலாளி குண்டுக்கட்டாக இழுத்து சென்று கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் 2011-ம் ஆண்டு சீமானுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம் 12 வார காலத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இன்று காலை விசாரணைக்கு ஆஜராகுமாறு வளசரவாக்கம் மகளிர் போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் சீமான் ஆஜராகவில்லை. 




இந்நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிய வளசரவாக்கம் போலீசார், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சம்மனை ஒட்டினர். அப்போது அங்கிருந்த சீமானின் தொண்டர் ஒருவர் அந்த சம்மனை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



இதனிடையே சீமான் வீட்டில் இருந்த காவலாளி அமல்ராஜ் கையில் துப்பாக்கி வைத்திருந்த நிலையில் போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். அப்போது அந்த காவலாளி துப்பாக்கியை போலீசாரிடம் தர மறுத்ததால், அவரது கையில் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி பறிமுதல் செய்தனர். பின்னர், குண்டுக்கட்டாக காவலாளி அமல்ராஜை போலீசார் இழுத்து சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.



 இதனிடையே ஓசூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், விஜயலட்சுமி வழக்கில் போதிய விளக்கம் அளித்தும் விளையாட்டை நிறுத்துவதாக தெரியவில்லை என்றும் நேரம் கிடைக்கும்போது பதிலளிப்பதாகவும் கூறினார்.













Night
Day