தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட பல லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
 
பெரம்பலூர் அருகே துறையூர் சாலையில் உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தேர்தல் பறக்குப்படையினர் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். சோதனையில் 300க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்துஒருவரை கைது செய்தனர். 

சேலத்தில் இருந்து கோவைக்கு வாகனத்தின் மூலம் எடுத்து செல்லப்பட்ட 38 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு - பவானி லட்சுமி நகர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வாகன மூலம் கொண்டு வரப்பட்ட  பிரபல தனியார் நகைக் கடைக்கு சொந்தமான நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் நகைக்கடை  சார்பில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்ட நிலையில், உரியவர்களிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 5 லட்சத்து 8 ஆயிரத்து 110 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன. மத்திகிரி பகுதியில், 1 லட்சத்து 45 ரூபாயும், அலசநத்தம் பகுதியில் 2 லட்சம் ரூபாயும், நல்லூரில் 1 லட்சத்து 63 ஆயிரம் ரூபாயையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து ஒசூர் சார் ஆட்சியரிடம் ஒப்படைத்தனர் பின் அந்த பணம் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி மொரப்பூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இன்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட 91 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் துணை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சந்திராபுரத்தில், உரிய ஆவணங்கள் இன்றி மின்சார ஸ்கூட்டரில் மறைத்து எடுத்து செல்லப்பட்ட 1 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாகரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் கோட்டாட்சியர் மணிகண்டனிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அது அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது. மேலும், பணத்தை எடுத்து வந்த அஜித்குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் காட்டேரிக்குப்பம் போலீஸார் லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அதனை தேர்தல் பறக்கும் படை அலுவலரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

Night
Day