எழுத்தின் அளவு: அ+ அ- அ
பாமக தலைவராக இனி நானே செயல்படுவேன்' என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் பொறுப்பை இனி நானே எடுத்துக்கொள்ளப் போவதாக தெரிவித்தார். டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமகவின் செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், "தலைவராக பொறுப்பேற்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளதாகவும் அவற்றையெல்லாம் சொல்ல முடியாது என்றும் ராமதாஸ் கூறியுள்ளார். கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவு எடுப்போம்" என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனரான ராமதாஸ் ஏற்கனவே தனது பேரன் முகுந்தனை இளைஞரணி செயலாளராக அறிவித்ததற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அந்த விவகாரம் கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் தற்போது அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ராமதாஸே அந்த பொறுப்பை கையில் எடுத்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.