எழுத்தின் அளவு: அ+ அ- அ
மனிதனுக்குத் துணையாக ரோபோக்கள் அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வரும் நிலையில் தற்போது
மதவழிபாடுகளிலும் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. மதவழிபாடுகளில் ரோபோக்களின் பயன்பாடு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
திருச்சி மாவட்டம், கருமண்டபம் பகுதியில் ஆண்டுதோறும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு சிறப்பம்சமாக நோன்பாளர்களுக்கு தேவையான சஹர் உணவுகள், நோன்பு கஞ்சி, பழங்கள் மற்றும் குளிர் பானங்களை விநியோகிக்கும் விதமாக திருச்சியைச் சேர்ந்த ஆஷிக் ரகுமான் தலைமையிலான ரோபாட்டிக் வடிவமைப்பாளர்கள் நவீன முறையில் ரோபோ ஒன்றை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளார்.
வழக்கமான நோன்புகாலத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூலமாக நோன்பு கஞ்சி மற்றும் நோன்பு திறப்புக்கான பழங்கள் மற்றும் பழச்சாறு வழங்கப்பட்டு வந்த நிலையில், முதன்முதலாக ரோபோ மூலம் நோன்புக்கான உணவுகள் வழங்கப்பட்டது இஸ்லாமிய நோன்பாளர்கள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
இது குறித்து ரோபோ வடிவமைப்பாளர் ஆஷிக் ரகுமான் கூறுகையில், கொரோனா காலக்கட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்து வழங்குவதில் முன்கள பணியாளர்களுடன் இணைந்து சுமார் 65க்கும் மேற்பட்ட பணியாற்றியதாக பெருமிதம் தெரிவித்தார். இதனிடையே, தற்போது இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் உணவு வழங்க ரோபோ உருவாக்கியது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.
வளர்ந்து வரும் அறிவியல் உலகத்தில் அனைத்து துறைகளிலும் ரோபோக்களின் பங்கு தற்போது அதிகரித்து வரும் நிலையில், நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ரோபோ பயன்படுத்தப்பட்டது மறக்க முடியாத நிகழ்வாக இருந்ததாக நோன்பாளர் சாகுல் ஹமீது கூறினார்.