இயற்கைக்கு புறம்பாக நாக்கை பிளவுப்படுத்தி டாட்டூ - இருவரை கைது செய்த போலீசார்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் tongue splitting எனப்படும், இயற்கைக்கு புறம்பாக நாக்கை பிளவுப்படுத்தி டாட்டூ  வரையும்
செயல்முறையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் நடத்தி வந்த டாட்டூ கடைக்கு சீல் வைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

டாட்டூ என்று அழைக்கப்படும் பச்சைக் குத்தும் பழக்கத்திற்கு பல நீண்ட கால வரலாறு உள்ளது. "டாட்டூ" என்ற வார்த்தை டஹிடியன் வார்த்தையான "டாடௌ" என்பதிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. இதன் அர்த்தம் "குறியிடுவது". கடந்த காலத்தில், பச்சை குத்தல்கள் பெரும்பாலும் அடையாளம், அலங்காரம் அல்லது ஆன்மிக வெளிப்பாடாக பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், பச்சை குத்தல்கள் கலை மற்றும் சுய வெளிப்பாட்டின் பிரபலமான வடிவமாகத் தொடர்கின்றன.

பச்சைக் குத்திக் கொள்வது தற்போது ட்ரெண்டாகி வரும் நிலையில், பச்சைக் குத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சியில் ஏலியன் என்ற பெயரில் மாடிஃபிகேஷன் கல்ச்சர் என்ற கடை நடத்தி வந்த ஹரிஹரன் என்ற இளைஞர், இயற்கைக்கு புறம்பாக நாக்கை பிளவுப்படுத்தும் tongue splitting-ல் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். 

திருச்சி மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்த இளைஞர் ஹரிஹரன், பாடி மாடிஃபிகேஷன் கல்ச்சர் என்ற பெயரில் டாட்டூ சென்டர் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில் கண்களுக்குள் பெயிண்டிங் செய்து கொள்வது, நாக்கை அறுவை சிகிச்சை செய்து கிழித்துக் கொண்டு வண்ணம் தீட்டிக் கொள்வதுடன், தன்னைப் போல பலருக்கும் இதுபோன்ற நாக்கை பிளவுப்படுத்தும் tongue splitting செய்து கொள்ளுமாறு சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தியுள்ளார்.

இதனை கண்ட சிலர் அவரிடம் சென்று நாக்கை பிளவுப்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை tongue splitting செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் இளைஞர் ஹரிஹரன். அதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், மருத்துவ கட்டுப்பாட்டை மீறி அறுவை சிகிச்சை செய்தல் மற்றும் இளைஞர்கள், மாணவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்ல முன்னுதாரணமாக இருந்த டாட்டூ கடையை நடத்தி வந்த ஹரிகரன் மற்றும் கடை ஊழியர் ஜெயராமன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.  

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஹரிஹரன் நடத்தி வந்த டாட்டூ கடைக்கு சீல் வைத்ததுடன், ஹரிகரன் மற்றும் கடை ஊழியர் ஜெயராமன் ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

மேலும் டாட்டூ போடவரும் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தும் தனது மொபைலில் சேகரித்து வைத்துள்ளதையும் போலீசார் கண்டறிந்தனர். இந்த நாசக்கார இளைஞர்கள் கையில் வேறு ஏதேனும் இளம்பெண்கள் சிக்கியுள்ளனரா என்றும், வேறு ஏதேனும் கும்பலுடன் தொடர்பில் உள்ளனரா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day