ஓவியக் கலைஞர்களின் தத்ரூப ஓவியங்கள்... காண்போரை ஈர்த்த ஓவியக் கண்காட்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை லலித் அகாடமியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட ஓவியங்கள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. உலக அமைதிக்காக எங்கள் படைப்பு என்ற தலைப்பில் வன்முறையை தவிர்க்கும் வகையில் வரையப்பட்ட ஓவியங்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்திதொகுப்பு.

ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது, உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது என்கிற திரைப்பட பாடல் வரிகளுக்கு ஏற்ப, ஓவியத்தில் உளமாற நினைக்கின்ற ஒவ்வொன்றையும் ஆவணப்படுத்திட முடியும். அந்த வகையில், இஸ்ரேல் மீது ஈரான் 400 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் குறிப்பிடத்தக்க அளவில் சேதம் ஏற்பட்டது. இந்த துயர சம்பவத்தை கண் முன்னே பிரதிபலிக்கிறது, ஒரு குழந்தை வான்நோக்கி கைகளை உயர்த்தி இருக்கக்கூடிய இந்த ஓவியம்.

தான் போரின் மூலம் ஏற்படும் துயரங்களை ஓவியங்கள் மூலம் காட்சிப்படுத்தியுள்ளதாகவும், குறிப்பாக இஸ்ரேல்-ஈரான், ரஷ்யா-உக்ரைன் போன்ற உலகப் பிரச்சனைகளை காட்சிபடுத்தியிருப்பதாகவும் ஓவியர் லலிதா தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் பாலியல் வன்கொடுமைக்கு காரணமாய் அமைவது பெண்கள் அணிந்திருக்கும் உடை என பிற்போக்குத்தனமாய் பேசுபவர்களின் அறியாமையாய் ஆழமாய் சொல்லுகிறது நாளிதழ் செய்திகள் ஒன்றிணைந்து சிட்டுக்குருவியின் கால்களை கட்டி இருக்கும் இந்தப் புகைப்படம்.

பெண்கள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான காரணம் ஒரு சில பெண் அணிந்து இருக்கக்கூடிய உடைதான் காரணம் என குற்றம் செய்தவர்கள் அவர்களுடைய தவறினை நியாயப்படுத்துவதாகவும் ஓவியர் ஸ்வேதா மோசஸ் தெரிவித்துள்ளார்.

முன்பெல்லாம் லட்சக்கணக்கில் வானில் பறந்த சிட்டுக்குருவிகள் இன்று காண்பதற்கே அரிய உயிரினமாக உள்ளது. மனிதனின் ரசனைக்கு விருந்தளித்த சிட்டுக்குருவி இனத்தை பாதுகாப்பதற்காக, பல்வேறு வண்ணமயமான சிட்டுக் குருவிகளை கண்முன்னே பிரதிபலிக்கிறது ஒரு வண்ணமயமான மேற்கத்திய நவநாகரிக ஓவியம்.

வண்ணங்களில் விளையாடுவது தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறிய ஓவியர் சுதா ராஜேந்திரன், தன்னுடைய ஓவியத்தில் அழிந்து வரும் உயிரினமான சிட்டுக்குருவிகளைப் பயன்படுத்தி இருப்பதாகவும், இந்த உலகத்தில் அனைவருக்கும் இடம் இருப்பது போல், சிட்டுக்குருவிகளுக்கும் நிச்சயம் இடம் உண்டு என்றும் ஓவியம் மூலம் வெளிப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சமூக அக்கறை கொண்டிருக்கக் கூடிய ஓவியங்கள் மிகவும் முக்கியமானது என்றும், குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் சீண்டல் குறித்து வைக்கப்பட்டிருந்த ஓவியம் தன்னை கவனிக்க வைத்ததாகவும் பார்வையாளர் ஒருவர் வியப்புடன் கூறினார்.

சமூக வளர்ச்சிக்கு ஓவியங்களின் பங்களிப்பு இன்றியமையாதது. சர்வதேச அளவில் சமூக மாற்றம், வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் ஓவியங்களின் தாக்கங்களும் அதிகம் உள்ளது. குறிப்பாக அச்சு ஊடகங்களில் வரும் சித்திரங்களே அதற்கு நிதர்சன சான்றுகள்.

Night
Day