தலைமை ஆசிரியர் இல்லாததால் நிர்வாக சீர்கேடு... நூற்றாண்டை கடந்த பள்ளியின் அவலநிலை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் அருகே 10 மாதங்களாக தலைமை ஆசிரியர் இல்லாமல் சேவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்குவதாகவும், மைதானம் மற்றும் வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். 

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே சேவூரில் கடந்த 1919ம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூறாண்டை கடந்த இந்த பள்ளியில் சேவூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரையில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த கொண்டப்பன், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பணியிட மாறுதல் கேட்டு சென்றுவிட்டார். அதற்கு பிறகு தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாகவே உள்ளது. இதுவரையில் நிரப்பப்படவில்லை. 

தலைமை ஆசிரியர் இல்லாததால் பள்ளியில் பணிபுரியும் 13 ஆசிரியர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லை என்றும், அவரவர் விருப்பத்துக்கு பள்ளிக்கு வருவதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளியில் இடவசதி இல்லாததால், காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து சாப்பிட உரிய இடம் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால், மாணவர்கள் விளையாட முடியாத நிலை உள்ளது. 

10 மாதங்களாக காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடத்தை விரைவில் நிரப்ப வேண்டும், மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும், உடற்பயிற்சி ஆசிரியர், கணினி ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும், காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு தனியிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், பள்ளி வளாகம் ஒட்டி வாரச்சந்தையில் உள்ள காலியிடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பெற்றோர்கள் விடுத்துள்ளனர்.

Night
Day