எழுத்தின் அளவு: அ+ அ- அ
தருமபுரி அரசு மருத்துவமனையில் ஏழைகளின் அட்சய பாத்திரமாக இருந்து வந்த அம்மா உணவகம் தற்பொழுது திமுக நகராட்சி தலைவரின் சுரண்டலால் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏழைகளின் பசியாற்றி வந்த உணவகத்தின் தற்போதைய நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் அம்மா உணவகம் சென்னையில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. ஏழைகளின் அட்சய பாத்திரமாக செயல்பட்டதால் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் அரசு பொது மருத்துவமனைகளிலும் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக நோயாளிகள், அவர்களுடன் தங்கி பராமரித்து வருபவர்கள் உணவு வாங்க வெளியே செல்லவேண்டிய அவசியம், மற்றும் உணவுக்காக அதிக பணம் செலவழிக்கும் நிலை இல்லாமல் இருந்தது.
அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் நகரப் பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் அதில் 10 பேருக்கு மேல் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் குறைக்கப்பட்டு தற்போது மூன்று பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் நோயாளிகள், அவர்களது உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தினந்தோறும் அம்மா உணவகத்தை நம்பி இருந்தனர். இந்த நிலையில் தற்போது தரமான, சுவையான உணவு வழங்குவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் போதிய அரிசி, பருப்பு, தக்காளி, எண்ணெய் என எதுவும் போதிய அளவில் இல்லை என்றும், முன்பு கொடுத்த பொருட்களை விட தற்போது குறைவாக கொடுப்பதால் உணவின் சுவை குறைவாக உள்ளதாகவும் அம்மா உணவக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அம்மா உணவகம் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் நகர மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த லட்சுமி நாட்டான் மாது உள்ளார். நகராட்சி நிர்வாகம் மூலம் டெண்டர் விடப்பட்டு அம்மா உணவகத்திற்கு காய்கறி, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் நிலையில் திமுக கிழக்கு மாவட்ட அமைப்பாளர் காசிநாதன் என்பவர் அந்த டெண்டரை எடுத்துள்ளதாகவும், அவர் குறைவான பொருட்களை கொடுப்பதால் தரமான உணவை சமைக்க முடியவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஏழை, எளிய மக்களின் பசியை போக்கி, அவர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் அட்சய பாத்திரமாக இருத அம்மா உணவகத்தை விளம்பர திமுக அரசு காழ்ப்புணர்ச்சின் காரணமாக முடக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதில் அரசியல் செய்யாமல் அம்மா உணவகங்களை முன்பு இருந்தது போல சிறப்பாக செயல்பட செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.