எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாளை மறுநாள் முதல் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், நாளை முதல் 22ம் தேதி வரை தென்கிழக்கு வங்கக் கடலின் தெற்கு பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.