பிறந்த குழந்தையை பார்க்க கூட லஞ்சம்... பணம் தராத தந்தையை தாக்கிய கொடூரர்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தையை பார்ப்பதற்கு லஞ்சம் கேட்டு காவலாளிகள் அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணம் கொடுக்காமல் வாக்குவாதம் செய்த தந்தையை காவலாளிகள் அடித்து வெளியே தள்ளிய நிலையில், நடந்தது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாளையம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னசாமி. இவர் கோதாவரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் நிலையில், இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் கர்ப்பமுற்ற கோதாவரியை பிரசவத்திற்காக கடந்த 18ம் தேதி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்துள்ளனர்...

அன்றே கோதாவரிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தையை பார்க்க வரும்போதெல்லாம் ஒப்பந்த காவலர்களுக்கு பணம் கொடுத்தால் மட்டுமே குழந்தையை பார்க்க முடியும் என்ற நிலையில், குழந்தையின் தந்தை சின்னசாமி தினமும் பணம் கொடுத்து குழந்தையை பார்த்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் வழக்கம் போல் தனது தாயுடன் மற்றொரு குழந்தையை தூக்கிக் கொண்டு மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சின்னசாமி சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காவலர்கள் பணம் கொடுத்தால் மட்டுமே தங்களை உள்ளே அனுமதிக்க முடியும் என கூறியுள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என சின்னசாமி கூறிய பின்பும், இரண்டு ஒப்பந்த காவலர்கள் அவரது சட்டையை கிழித்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.

சின்னசாமி சத்தம் போடவே மக்கள் கூடியதால் காவலர்கள் நல்லவர்கள் போல் நடித்து மருத்துவமனையில் பாதுகாப்பில் இருக்கும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் விரைந்து வந்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். 

அப்போது, பணம் கேட்டு தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சிய போக்குடன் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. தங்களிடம் பணம் இல்லை என்று காவலாளிகளிடம் தெரிவித்த போதும், அவர்கள் குழந்தையை பார்க்க விடாமல் மகன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக சின்னசாமியின் தாய் செல்வி வேதனையுடன் கூறினார்.

தான் காவலாளிகள் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்ததாகவும், மனைவியை டிஸ்சார்ஜ் செய்வதற்காக சென்ற போது பணம் கேட்டு தொந்தரவு செய்து தன்னை தாக்கியதாகவும் குழந்தையின் தந்தை சின்னசாமி தெரிவித்தார். விளம்பர திமுக ஆட்சியில் பிறந்த பச்சிளம் குழந்தையை பார்க்க கூட பணம் கொடுத்தால் மட்டுமே, அரசு மருத்துவமனைக்குள் செல்ல முடியும் என்ற அவல நிலை நிலவுவதாக, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்

Night
Day