எழுத்தின் அளவு: அ+ அ- அ
பெண் காவல் உதவி ஆய்வாளரின் மகன் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதோடு நான் யார் தெரியுமா என எகத்தாளம் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம், கார் உடைப்பு உள்ளிட்ட களேபரங்களால் திருவண்ணாமலையில் பலமணிநேரம் பரபரப்பு தொற்றிக் கொண்டது. என்ன நடந்தது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
சென்னையைச் சேர்ந்தவர் காவல் உதவி ஆய்வாளர் வளர்மதி. இவர் தனது மகன் ஆகாஷ் மற்றும் குடுத்தாருடன் திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு காரில் மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். காரை ஆகாஷ் ஓட்டி வந்துள்ளார். திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையில் அருகே வடவீதி சுப்ரமணியர் கோவில் அருகே வந்தபோது, குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் ஆகாஷ், சாலையோரம் நிறுத்தப்பட்ட ஆட்டோ மீது மோதியுள்ளார்.
கார் மோதியதால் ஆட்டோ சேதமடைந்ததை அடுத்து ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர், காருக்குள் இருந்த ஆகாஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். காரை விட்டு இறங்காத ஆகாஷ் நான் யார் தெரியுமா என கூறியபடி மீண்டும் ஆட்டோ மீது மோதியுள்ளார். இதில் கோவில் அருகில் இருந்த கடைகள் மீது மோதியதில் கடைகள் சேதமடைந்தன.
இந்த களேபரங்களை பார்த்துக் கொண்டிருந்த அங்கிருந்த போக்குவரத்து காவலர், ஆகாஷை காரை விட்டு இறக்கி விசாரித்தார். அப்போது, ஆட்டோ ஓட்டுநர் நான்கு முறை கார் மீது ஆட்டோவை வைத்து மோதியதாக ஆகாஷும் வளர்மதியும் குற்றம் சாட்டினார். அப்போது காவல் உதவி ஆய்வாளர் வளர்மதி, தம்மை பற்றி போலீசாரிடம் கூற, ஆகாஷை காரில் ஏற்றி அங்கிருந்து அனுப்பும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர்கள் ஆகாஷை காரை விட்டு வெளியே வரச் சொல்லி தகராறில் ஈடுபட்ட நிலையில், அப்போது ஒருவர் காரின் கதவை ஒருவர் சேதப்படுத்தியதால் பரபரப்பு நிலவியது.
நிலைமை எல்லை மீறிச் சென்ற நிலையில், சேதமடைந்த கடைகளுக்கு பணம் கொடுத்துவிடுவதாக கூறிய வளர்மதி, தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். பதிலுக்கு ஆகாஷை கைது செய்ய எதிர்தரப்பினர் கூறினர். இதையடுத்து ஆகாஷை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற போலீசார், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காரை சேதப்படுத்திய 3 பேரை அடித்து இழுத்து ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர்.
காவல்நிலையத்தில் இருதரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக திருவண்ணாமலையில் முக்கிய சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக குடிபோதையில் வாகனத்தை ஓட்டக்கூடாது என பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய உதவி ஆய்வாளரின் மகனே, குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.