எழுத்தின் அளவு: அ+ அ- அ
கோவையில் தூய்மைப் பணியாளர்களுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் திறந்து வைத்து 6 மாதங்களாகியும் ஒதுக்கீடு செய்யாதால், வீட்டின் பூட்டை உடைத்து பயனாளிகள் குடியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக நிர்வாகிகளின் குறுக்கீடு செய்வதால் வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
கோவை உக்கடம் சிஎம்சி காலனியில் 520, வெரைட்டி ஹால் ரோட்டில் 432 என தூய்மை தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வந்தன. இவர்களுக்கு புதியதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருவதாக கூறி, சிஎம்சி காலனி, வெரைட்டி ஹால் ரோட்டில் இருந்து தூய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். பின்னர் அப்பகுதியில் உள்ள வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி, தற்காலிகமாக தகர கொட்டகையில் தங்க வைக்கப்பட்டனர்.
முதற்கட்டமாக கோவை உக்கடத்தில் 222 வீடுகள், வெரைட்டி ஹால் ரோட்டில் 192 வீடுகள் மட்டும் கட்டப்பட்டன. இந்த புதிய கட்டடத்தை கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால் 6 மாதங்களாகியும் இன்னும் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கவில்லை. திமுக வார்டு செயலாளர் ஆனந்த் என்பவர் ஒரு குடும்பத்தில் இருவருக்கு வீடு ஒதுக்குவதற்காக பணம் வசூலிப்பதாகவும், திமுக கவுன்சிலர், தனக்கு 50-க்கும் மேற்பட்ட வீடுகள் வேண்டும் என்றும் பொதுமக்களை வேறு இடத்திற்கு தங்குமாறு வற்புறுத்துவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கோவை உக்கடம் சிஎம்சி காலனியில் உள்ள அடுக்குமாடு குடியிருப்பு கட்டிடத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திரண்டனர். வீடுகளை உடனடியாக ஒதுக்கீடு செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், ஸ்டாலின் தான் வராரு வீடு திறக்க போறாரு என்று கேலி செய்து பாட்டு பாடியவாரு ஆளுக்கு ஒரு வீட்டை திறந்து உள்ளே புகுந்தனர். வீட்டின் பூட்டை உடைத்து அவர்கள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
தகவல் அறிந்து அங்கு வந்த உக்கடம் போலிசார், வீடுகளுக்குள்ளிருந்து பொதுமக்களை வெளியேற்றினர். இதையடுத்து போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு, வீடு வேண்டும் வீடு வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்த நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
தூய்மைப் பணியாளர்களுக்காக கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை அவர்களுக்கு கொடுப்பது போல விளம்பரம் செய்து கொண்ட விளம்பர திமுக அரசு, சம்பந்தப்பட்ட பயனாளிகுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்யாமல் 6 மாதங்களாக இழுத்தடிப்பு செய்து வருகிறது. தங்களின் சுயலாபத்துக்காக திமுக நிர்வாகிகள், பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்துவது தூய்மை பணியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் வீடுகளை ஒதுக்கி கொடுத்து எளிய மக்களின் வீடு கனவை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.