வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஆழ்துளை கிணறு... குமுறும் முறப்பநாடு மக்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

முறப்பநாடு தாமிரபரணி ஆற்று படுகையில், புதிதாக ஆழ்துளை கிணறு மற்றும் பம்ப் செட் அமைக்கும் திட்டத்திற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தை கைவிடாவிட்டால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, ஊரை காலி செய்யும் நிலை ஏற்படும் என மனமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த சிறப்பு தொகுப்பை தற்போது காணலாம்...

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், பாபநாசம் சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய அணைகள் உள்ளது. இந்த அணைகள் மூலமாக திருநெல்வேலி மாவட்டத்தில், 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 86 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. 

மேலும் தாமிரபரணி ஆற்றில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நெல்லை மாவட்டம் சீவலப்பேரி, தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. 

தாமிரபரணி ஆற்றில் இருந்து மேற்பரப்பு நீரை எடுப்பதற்காக செயல்படுத்தப்படும் அரியநாயகிபுரம் குடிநீர் திட்டம், மாநகராட்சிக்கு மேலும் 50 மில்லியன் லிட்டர் தண்ணீரை வழங்குவதை உறுதி செய்யும் என்பதால், மாநகராட்சி 24 மணி நேரமும் குடியிருப்பு வாசிகளுக்கு குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக தாமிரபரணி ஆற்றுபடுகையில், ஆழ்துளை கிணறு மற்றும் பம்ப் செட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி, ஆழ்துளை கிணறு மற்றும் பம்ப் செட் அமைக்கும் திட்டத்தை உடனே நிறுத்தக்கோரி முறப்பநாடு கிராம மக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, இத்திட்டத்தை கைவிடகோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறப்பநாடு கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். ஏற்கெனவே 75 உறை கிணறுகள் அமைத்ததன் காரணமாக மழைக்காலங்களில் ஊருக்குள் தண்ணீர் வருவது வழக்கமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். 

தற்போது மீண்டும் புதிதாக ஆழ்துளைகிணறுகள் அமைத்து தண்ணீர் செல்லும் வழித்தடத்தை அடைத்தால்,  கிராம மக்கள் இந்த பகுதியில் குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என குற்றம்சாட்டியுள்ளனர். அனைவருமே ஊரை காலி செய்து வெளியில் செல்லக்கூடிய நிலை ஏற்படும் என தங்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே உள்ள உறை கிணறுகளால் தங்களுக்கு பாதிப்பு உள்ளது என பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும், இந்த சூழலில் தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளாமல், மீண்டும் இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது மிகவும் வேதனைக்குரியது என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே ஏற்கெனவே உள்ள உறை கிணறுகளால் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்ய வேண்டும், மழைக்காலங்களில் தண்ணீர் ஊருக்குள் வராமல் இருக்க, கரையோரத்தில் தடுப்புகள் அமைத்து தர வேண்டும், பம்பு ஹவுஸில் இருந்து வரக்கூடிய மின் வயர்களை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல வேண்டும், உறை கிணறுகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு தண்ணீர் எடுத்து செல்வதை நிறுத்த வேண்டும், புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை கைவிட தமிழக அரசும், பொதுப்பணித்துறையினரும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறப்பநாடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day