எழுத்தின் அளவு: அ+ அ- அ
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி ஞானசேகரனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது. ஞானசேகரன் மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.....
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சைதாப்பேட்டை பகுதி திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஞானசேகரன் கோட்டூர்புரம் மண்டபம் சாலையில் உள்ள ஏரிக்கரை தெருவில் வசித்து வரும் நிலையில், இந்த தெருவில் உள்ள பல்வேறு நண்பர்களை வைத்து, வாட்ஸ் அப் மற்றும் முகநூல் குழுக்களை ஆரம்பித்துள்ளார்.
அதில் புதிதாக ஒரு பெண்ணின் புகைப்படத்தை பதிவிடும் போது, புதிய பொட்டி வந்துள்ளது என்ற தகவலையும் வெளியிட்டு வந்துள்ளார். அப்போது வாட்ஸ் அப் குழுவில் உள்ள நண்பர்கள் மற்றும் முகநூல் குழுவில் உள்ள நண்பர்கள், அந்த பெண்ணின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதும் ஞானசேகரனிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஏராளமான மாணவிகள், பெண்கள், காமுகன் ஞானசேகரனால் சீரழிக்கப்பட்டுள்ளதும், பல பேர் இது போன்ற சம்பவத்தை வெளியே சொல்லாமல் இருந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். ஒரு வழக்கில் கூடவா ஞானசேகரன் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், பெண்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டும் சமூக ஆர்வலர்கள், புரட்சித்தலைவி அம்மா ஆட்சி காலத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
புரட்சித்தலைவி அம்மா ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கையின் காரணமாக ஞானசேகரன் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு திருட்டு சம்பவத்திலும் கைது செய்யப்படும் போதும், கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு வேறு பகுதிக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததும் அம்பலமாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் 170வது வட்ட செயலாளராக உள்ள சண்முகத்துடன் இணைந்து கட்சி நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்வது, பிரியாணி சப்ளை செய்வது, ஆட்களை திரட்டுவது என ஞானசேகரன், சண்முகத்தின் வலது கரமாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த செல்வாக்கை பயன்படுத்தி, திமுகவினரின் பின்புலத்தில் அவன் மீதான அனைத்து வழக்குகளும் கிடப்பில் போடப்பட்டதுடன், சைதை கிழக்கு பகுதி திமுக மாணவர் அணி துணை அமைப்பாளராக பதவியையும் ஞானசேகரன் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே திருட்டு, கொள்ளை வழக்குகளை திமுக துணையுடன் செய்துள்ள ஞானசேகரன், தற்போது மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஞானசேகரன் குறித்து எந்த ஒரு தகவலும் ஊடகங்களுக்கு கசியவிடக்கூடாது என அவரது தாய் கங்கா மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டல் விடுப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி ஞானசேகரன் மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, இதில் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.