2024ஆம் ஆண்டின் சிறந்த 10 தமிழ் படங்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

2024ஆம் ஆண்டின் சிறந்த 10 தமிழ் படங்கள்

2024ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகில் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகின. அவற்றிள் சிறந்த 10 படங்களை இங்கே பார்க்கலாம். Story, Making, Performance மற்றும் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் (Impact) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை பார்ப்பதற்கு முன்னதாக, நல்ல கதையம்சத்துடன் வெளியான கொட்டுக்காளி, ஜமா, ஜே பேபி, நந்தன், பிளாக், போகுமிடம் வெகுதூரமில்லை ஆகிய படங்களுக்கும், படக்குழுவுக்கும் வாழ்த்துகளை கூறிவிட்டு, TOP 10 MOVIES பட்டியலைப் பார்க்கலாமா... 

10. லவ்வர் 

இளைஞர்களை டார்கெட் செய்து எடுக்கப்பட்ட லவ்வர் திரைப்படம் நமது பட்டியலில் பிடித்திருக்கும் இடம் 10. காதல்களும் அதன் மோதல்களும் காலத்திற்கு காலம் மாறிக்கொண்டே இருந்தாலும், அதன் அடிப்படையான ஆணவ மோதலை காதலர்கள் மத்தியில சரியாகக் கையாண்ட திரைப்படமாக லவ்வர் உருவாகி இருந்தது. அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் மணிகண்டன் – கௌரி பிரியா இருவரும் லீட் ரோலில் நடித்திருந்தார்கள். எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத கதாநாயகன், காதலி மேல் அன்பு செலுத்துவதாக நினைத்துக்கொண்டு அந்த உறவில் நஞ்சை செலுத்தும் தருணங்களும், சூழல்களும் நிஜத்திற்கு மிக அருகில் இருந்தன. அன்பு என்ற பெயரில் ஒருவர் மீது செலுத்தும் வன்முறையை அனுமதிக்க கூடாது என்பதை இந்தப்படம் ஆழமாக உணர்த்தியது. காதலின் பிரிவு வலியை தரும் என உணர்ந்தாலும், காதலிக்கு தான் கொடுத்த கஷ்டங்களை புரிந்தும் புரியாமலும் கதாநாயகன் விலகி செல்லும் கிளைமேக்ஸ் காட்சி கிளாஸ்! இரண்டாம் பாதியில் வரும் சில Repeated காட்சிகளைக் குறைத்து, திரைக்கதைய இன்னும் கொஞ்சம் பட்டை தீட்டியிருந்தால் நமது பட்டியலில் இந்த லவ்வர் இன்னும் சில இடங்கள் முன்னேறியிருப்பார். ஆனாலும், எப்படி இருக்கக் கூடாது என்கிற டாக்ஸிக் காதலை திரையில் காண்பித்த இயக்குநருக்கு பாராட்டுகள். லவ்வர் – டாக்ஸிக்!




9. கருடன்

நியாயத்திற்கும் விசுவாசத்திற்கும் இடையே சிக்கித் தவிக்கும் சாமானியன் ஒருவன் கடைசியில் எதைத் தேர்வு செய்கிறான் எனக் கூறிய கருடன் நமது பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது. நட்பு, விஸ்வாசம், பகை, வஞ்சம் என விரியும் வெற்றிமாறனின் கதையை எடுத்துக்கொண்டு பிரதான கதாபாத்திரங்களை அழுத்தமாகவும், ஆழமாகவும் அணுகி, தன் நேர்த்தியான மேக்கிங்கால் கருடனை உயர பறக்க வைத்திருந்தார் டைரக்டர் துரை செந்தில்குமார். சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ஷிவதா ஆகியோரின் பாத்திரங்கள் எழுதப்பட்ட விதமும், அதனை அவர்கள் கையாண்ட விதமும் படத்திற்கு பக்கபலமாக அமைந்தது. ஆனால் சைலண்ட்டாக இருந்து இடைவேளையில் இவர்கள் எல்லோரையும் தூக்கி சாப்பிட்ட சூரி, கடைசியில் கண்மூடித்தனமான விஸ்வாசத்தை விட, நியாயத்தின்பக்கம் நிற்கும் காட்சியிலும் மிரட்டியெடுத்துட்டார். ஆக்சன், காதல், பாசம், நட்பு, விஸ்வாசம், துரோகம் என வழக்கமான ’தெற்கத்தி படம்’ டெம்ப்ளேட்டில் இருந்து கொஞ்சம் மாறியிருந்தால் இந்த கருடன் இன்னும் உயர பறந்திருக்கலாம். ஆனாலும், மேக்கிங் மற்றும் நடிகர்ளின் அசத்தலான நடிப்பால் சுவாரஸ்யமான கமெர்ஷியல் படமாக மாற்றியதுதான் கருடனின் வெற்றி. கருடன் – மனசாட்சி!



8. வேட்டையன்

”குறி வச்சா இரை விழணும்” என்று சமூகத்தில் என்கவுன்டர் மீதான விவாதத்தை உண்டாக்கிய வேட்டையன், நமது பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்துள்ளது. ’ஜெய்பீம்’ மூலம் கஸ்டடி மரணத்தின் குரூரத்தை உணர்வுப்பூர்வமாகவும், ஜனரஞ்சகமாகவும் சொல்லி வெற்றி பெற்ற இயக்குநர் த.செ.ஞானவேல், அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து போலி என்கவுன்டர் பிரச்சினையை, அதுவும் தமிழகத்தில் என்கவுன்டர் அதிகரித்த சூழலில் படமாக்கியிருந்தார். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபாட்டி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. என்கவுன்டரை ஆதரிக்கும் பொதுப்புத்தி மீதான விமர்சனம், அந்த என்கவுண்டருக்குப் பின்னால் இருக்கிம் அரசியல், நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதம், கல்வியை வியாபாரமாக்கியதில் இருக்கும் பிரச்சினை என பல விஷயங்கள் பற்றி பேசியிருந்தார் இயக்குநர். அதையெல்லாம் ரஜினி என்ற ஒரு பிரம்மாண்ட பிராண்டின் மூலமாக பேசியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய முயற்சி. ஆனாலும் சூப்பர் ஸ்டாருக்காக செய்யப்பட்ட சில Compromises-ஐ பண்ணாமல் இருந்திருந்தால் டாப் 10 பட்டியலில் இன்னும் சில இடங்கள் முன்னேறியிருக்கலாம். ஆனால் அப்படி செய்திருந்தாலும் ’இப்படி கருத்து பேசுறதுக்கு சூப்பர்ஸ்டார எதுக்கு?’ என்ற கேள்வியையும் எழுப்பியிருப்பார்கள். எது எப்படி இருந்தாலும், ”நாட்டுக்கு தேவை விரைவான நீதியே தவிர, அவசரமான நீதி அல்ல” என்ற கருத்தை உரக்கப் பேசிய ஞானவேலை மனதார பாராட்டலாம். வேட்டையன் – பாடம்!



7. அமரன்

ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை என்றால் வெறும் சண்டை, தியாகம் மட்டுமல்ல, அவருடைய லைஃப்லயும் உணர்வுப்பூர்வமான காதல் இருக்கும் என உணர்த்திய அமரன் இந்த பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்தியேகன், சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ்  உட்பட பலர் நடித்த அமரன் திரைப்படம், சிவகார்த்திகேயன் கெரியரிலேயே அதிக வசூலை ஈட்டி சாதனை புரிந்தது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களை கண்ணீர் விட வைத்தது உண்மை. முகுந்தின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை, அவரது ராணுவ வாழ்க்கை என 2 பக்கங்களையும் காட்டிய திரைக்கதையை, நடிகர்களின் கச்சிதமான நடிப்பும், உணர்வுப்பூர்வமான காட்சிகளும், அதற்கேற்ற நேர்த்தியான மேக்கிங்கும் உச்சம் தொட வைத்தது. காஷ்மீரின் உண்மையான அரசியல் பற்றி சிறிதும் பேசாமல் விட்டது, பயோபிக்கில் ஹீரோயிஸத்துக்கான பில்டப் என சில குறைகள் இல்லாமல் இருந்திருந்தால் முதல் 5 படங்களுக்குள் இடம் பெற்றிருக்கும். ஆனாலும், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு குறையில்லாத மரியாதையை செய்த இந்த அமரனை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அமரன் – அமர்க்களம்!




6. மெய்யழகன்

உண்மையான உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்திய மெய்யழகன் இந்த பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது. 96 படத்தில் ராம் – ஜானு ஆகியோரின் காதலை நாஸ்டாலஜிக் ரசனையோடு காட்டிய இயக்குநர் பிரேம்குமார், அதே டெம்ப்ளேட்டில் ஊரையும் உறவையும் இணைத்து, நெகிழ வைத்திருந்தார். கார்த்தி மற்றும் அரவிந்தசாமி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்த இந்த மெய்யழகன், சொந்த ஊர் உறவுகளைப் பிரிந்து வெளியூர்களில் வாழ்பவர்கள், மீண்டும் சொந்த ஊர் திரும்பும்போது வரும் பரிதவிப்பை ஆழமாக பதிவு செய்திருந்தது. நாம் சாதாரணமாக கடந்து போகும்  சில விஷயங்கள், மத்தவங்களுக்கு வாழ்க்கையையே மாற்றும் பொக்கிஷமாக மாறலாம் என்பதை அழகாக சொல்லியிருந்தார் இயக்குநர். இரண்டாவது பாதியில் வரும் மன்னர் பெருமை கதைகள், சமூக பிரச்சினை வசனங்கள், ஜல்லிக்கட்டு காட்சியெல்லாம் கதைக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் போனதால், இந்த மெய்யழகன் பட்டியலில் இன்னும் முன்னேற முடியாமல் போனது. ஆனாலும், உண்மையான உறவுகளின் முக்கியத்துவத்தை தெரியாதவர்கள், கட்டாயம் ஒரு முறை இந்த மெய்யழகனை பார்க்க வேண்டும் என கண்டிப்பாக ரெகமெண்ட் செய்யலாம். மெய்யழகன் – அழகு!


 
5. தங்கலான்

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் திரைப்படம் இந்த பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது. விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலர் நடித்த இப்படத்தை, பூர்வகுடி மக்களின் ரத்தத்திலும் வியர்வையிலும் உருவான கோலார் தங்க வயலின் மறைக்கப்பட்ட வரலாற்றை, தொன்மக் கதைகள் வழியாக கற்பனை கலந்த ஃபேன்டசி படைப்பாக இயக்குநர் பா.ரஞ்சித் உருவாக்கியிருந்தார். ஆடை முதல் மேக்-அப் வரை படத்திற்கான செட்டிங், வறட்சியால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களின் வாழ்க்கை என வலிமையான தாக்கத்தை இப்படம் ஏற்படுத்தியது. பௌத்தம் மெல்ல மெல்ல அழிக்கப்பட்ட பின்னணி, அரசர்களுக்குப் பின்னால் வந்த ஜமீன்தார்கள் நிலங்களை வஞ்சித்துப் பிடுங்கியது, இயற்கை வளங்களுக்குச் சொந்தக்காரர்களான ஆதிக்குடிகளை வைத்தே அதை கொள்ளையடிப்பது என தங்கலான் பா.ரஞ்சித்தோட ஒரு வரலாற்றுத் தேடலாக உருவாயிருந்தது. வி.எஃப்.எக்ஸ். மற்றும் சவுண்ட் மிக்ஸிக் சரியில்லை என்று சிலர் விமர்சனம் வைத்தாலும், அவர்களுக்கு ரஞ்சித்தின் அரசியலை ஏற்க மனமில்லை என்பதுதான் உண்மை. சாதிய ஒடுக்குமுறையையும், நில அரசியலையும் ரஞ்சித்தின் முந்தைய படங்களைவிட ‘தங்கலான்’ ஒருபடி மேலே சென்று மிக அழுத்தமாகவே பதிவு செய்திருந்தது. தங்கலான் – தேடல்!



4. வாழை

தன் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை, 2024-ன் சிறந்த தமிழ் படங்கள் பட்டியலில் 4வது இடம் பிடிக்கிறது. கடல் போன்று விரிந்து கிடக்கும் வாழைத் தோட்டங்களில் விளைந்த வாழைத்தார்களை, குறைவான கூலிக்கு வலியோடு சுமந்துகொண்டு நெடுந்தூரம் கரையை நோக்கி நடந்தாலும், வாழ்க்கையில் கரையேற முடியாத கூலித் தொழிலாளிகளின் போராட்ட வாழ்க்கையை அனைவரும் ரசித்து, அழுது பாக்கும்படி பந்தி வைத்தது வாழை. படம் பார்த்த ஒவ்வொருவரையும் அவர்களது பள்ளிப் பருவத்திற்கே அழைத்துச் சென்றது இப்படத்தின் மிகப்பெரிய வெற்றி. மாணவன் - ஆசிரியர் இடையேயான காட்சிகளில் சிலவற்றைத் தவிர்த்திருந்தால் இன்னும்கூட இந்த பட்டியலில் முன்னேறியிருக்கலாம். ஆனாலும், வயதிற்கு மீறிய சுமையை சுமக்கும் ஏழ்மையையும், பசிக்கு ஒரு வாழைப்பழத்தைப் சாப்பிட்டுவிட்டு அடிபடும் அவலத்தையும் பார்த்து, பார்வையாளர்களை குற்றவுணர்வில் கண்ணீர் விட வைத்துதான் ஒரு படைப்பாளியாக மாரியின் வெற்றி. வாழை – விருந்து!



3. லப்பர் பந்து

கிரிக்கெட்டை மையப்படுத்தி எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்த லப்பர் பந்து நமது பட்டியலில் பிடித்திருக்கும் இடம் 3. ஹரிஷ் கல்யாண், கெத்து தினேஷ், சஞ்சனா, ஸ்வாசிகா உட்பட பலர் நடித்த லப்பர் பந்து எல்லாருக்கும் பிடித்தமான ஜனரஞ்சக படம் என்று தாராளமாகச் சொல்லலாம். கிரிக்கெட்டை ஒரு மதம்போல் கொண்டாடும் இந்தியாவில் அந்த விளையாட்டின் பின்னணியில் கிராம மக்களின் வாழ்க்கையைப் பிண்ணி கதைக்களமாக்கியிருந்தார் அறிமுக இயக்குநர் தமிழரன் பச்சைமுத்து. அதில் தனிநபர்களின் ஈகோ, சாதி அரசியல், Situation Comedy மற்றும் Emotions கலந்து, உறவுகளால் பிண்ணப்பட்ட திரைக்கதை பார்வையாளர்களை உருக வைத்தது. முதன்மைப் பாத்திரங்களை எழுதியிருந்த விதமும், பெண் கதாபாத்திரங்களுக்கு கொடுத்திருந்த முக்கியத்துவமும் படத்திற்கு கூடுதல் பலம். கதைக்குள் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகள் படமாக்கப்பட்ட விதமும், அவை தந்த அழுத்தமும் டி20 மேட்ச் ஹைலைட்ஸ் போல அசத்தலாக இருந்தது. லப்பர் பந்து – சிக்சர்!



2. மகாராஜா

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா திரைப்படம் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் 50வது படமான மகாராஜா, வசூலிலும் சாதனை படைத்தது. தமிழில் பெரும் வெற்றி பெற்ற மகாராஜா, ஓடிடியில் ரிலீஸான பிறகு இந்தியா முழுவதும் பாராட்டுகளை பெற்றது. தற்போது சீனாவிலும் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தன் மகளுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு காரணமான குற்றவாளியை கண்டறிய முயற்சிக்கும் ஒரு சாமானியன், தன்னுடைய சாணக்கியத்தனத்தால் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை பார்வையாளர்கள் இடையே பரபரப்பும், படபடப்பும் தொற்றிக்கொள்ளும் வகையில் சொல்லியிருந்தார் இயக்குநர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், Twist & Turns நிறைந்த வலுவான கதைக்களமும் இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. யாருமே எதிர்பார்க்காத கிளைமேக்ஸ் ட்விஸ்ட் பார்வையாளர்களை அதிர்ச்சியில ஆழ்த்தி, மகாராஜாவை கொண்டாட வைத்தது. மகாராஜா – அரியணை!




1.விடுதலை 2

TOP 10 MOVIES Of 2024 பட்டியலில் முதலிடத்தை அலங்கரிக்கிறது வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியான விடுதலை பாகம் 2. முதல் பாகத்தில், மலை கிராம மக்களின் வாழ்வியலையும் தேடுதல் வேட்டை என்ற பெயரில் காவல்துறை நடத்திய அத்துமீறல்களையும், கொஞ்சம்கூட சமரசமில்லாமல் பதிவுசெய்த இயக்குநர் வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் களப்போராளிகளின் தனிப்பட்ட வாழ்க்கை, அவர்களது குடும்பங்களின் வாழ்வியல் வலிகளை உருக்கமாகப் பதிவு செய்திருந்தார். சினிமாவை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், தலைமறைவு, கைது, கண்ணீர், கொடூர மரணங்கள் என பிணைந்திருக்கும் இயக்கவாதிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை, இந்த டிஜிட்டல் யுகத்தில் ஆவணப்படுத்தியதோடு, இன்றைய இளம் தலைமுறைக்கு அரசியல் பாடம் நடத்தியிருந்தார் இயக்குநர் வெற்றிமாறன். வளர்ச்சி என்ற பெயரில் அரசு கொண்டு வரும் எந்தவொரு திட்டத்தாலும், ஒரு நபரோ, ஒரு குடும்பமோ, ஒரு தெருவோ அல்லது ஒரு ஊரோ பாதிக்கப்பட்டால், எப்போதும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்றுதான் அதை அணுக வேண்டும் என்று அரசுக்குப் பாடம் புகட்டியிருந்தாலும், ஆயுதப் போராட்டமும், வன்முறையும் விடுதலைக்கு வழிவகுக்காது என்பதை பெருங்கதையாடல் மூலம் விளக்கி, ஜனநாயக நாட்டில் குடிமக்களின் வாக்குரிமை ஆயுதங்களைவிட வலிமையானது என உணர்த்தியதே வெற்றிமாறனின் அரசியல் வெற்றி. விடுதலை - வேட்கை!



எழுத்து - ரு.சிகாமணி

Night
Day