எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் உயர்ரக மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? மதுபான கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்...
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த கண்டிப்புதூர் பகுதியில் உயர்ரக மதுபான கடை கட்டும் பணிகள் சில மாதங்களுக்கு முன் தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. நகரின் மையப் பகுதியில் ஏசி உயர்ரக மதுபான கூடம் கட்டியிருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள், கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பே கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
அந்த மனு மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், உயர்ரக மதுபான கடை திறப்பு விழாவிற்கு தயாராகிக் வருவது பொதுமக்களுக்கு தெரியவர ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றனர்.
தாங்கள் எதிர்ப்பு தெரிவித்தும், மதுபான கடை இயங்குவதற்கு ஆளும் கட்சியை சேர்ந்த யாரோ செயல்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டி சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர் பொதுமக்கள்.
இதன் காரணமாக, திருச்செங்கோடு-சேலம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டோரை அப்புறப்படுத்த முற்பட்டனர். ஆனால், மாவட்ட ஆட்சியர் மறியல் நடைபெறும் இடத்திற்கு நேரில் வருகை தந்து தனியார் உயர் ரக மதுபான கடை திறக்கப்படாது என உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் எனக் கூறி தொடர்ந்து போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்து வாகனத்தில் ஏற்றியதால் பரபரப்பான சூழல் நிலவியது.
8 மாத காலமாக புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய மக்கள் மதுபான கடைக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மதுபான கடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டால், போலீசாரரை ஏவி கைது செய்வதாகவும், மதுவை ஒழிப்போம் என பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் மதுகடைகளை அதிகரிப்பதாக பெண்கள் குற்றம்சாட்டியுள்ளார்.
பள்ளிபாளையம் அடுத்த கண்டிப்புதூர் பகுதியில் உயர்ரக மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.