எழுத்தின் அளவு: அ+ அ- அ
கேரளாவில் காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த காதலி கிரீஷ்மாவிற்கு தூக்கு தண்டனை விதித்து நெய்யாற்றங்கரை கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு கேரளாவின் மூரியங்கரையைச் சேர்ந்த ஷாரோன்ராஜும், கிரீஷ்மா என்பவரும் காதலித்து வந்த நிலையில், கிரீஷ்மாவுக்கு வேறொருவருடன் நிச்சயம் செய்யப்பட்டது. இதனையடுத்து, இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் ஷாரோனிடம் இருந்ததால், அவரை வீட்டுக்கு அழைத்த கிரீஷ்மா, கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார். இவ்வழக்கில் கிரீஷ்மா, அவரது தாய் சிந்து மற்றும் மாமா நிர்மல் குமாரன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை நெய்யாற்றங்கரை கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பல்வேறு விசாரணைக்குப் பிறகு கிரீஷ்மா, அவரது மாமா நிர்மல் குமாரன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். மேலும், கிரீஷ்மாவின் தாயார் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் இருவருக்கும் விதிக்கப்பட உள்ள தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த காதலி கிரீஷ்மாவிற்கு தூக்கு தண்டனை விதித்து நெய்யாற்றங்கரை கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கொலைக்கான தடயங்களை அழித்த தாய் மாமன் நிர்மல் குமாரனுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி ஏ.எம்.பஷீர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தடயங்களை அழித்த நிலையிலும் டிஜிட்டல் எவிடன்ஸ் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம் புதிய காலத்திற்கேற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் குற்றவாளியை கண்டுபிடித்த காவல்துறைக்கு நீதிபதி பாராட்டுகளை தெரிவித்தார்.