கொடைக்கானலில் கொலை சிவகங்கையில் அத்துமீறல் போலீசாரின் முக்கோண விசாரணை..! பகீர் கிளப்பும் பின்னணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொடைக்கானல் தனியார் விடுதி உரிமையாளர் கொலை வழக்கில் சிவகங்கை பெண் பயிற்சி மருத்துவரை துரத்திச் சென்ற மர்ம நபர் சம்மந்தப்பட்டிருப்பது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 

சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் பாதுகாப்பு இல்லை என மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க.. கடந்த 21ம் தேதி முதல் விடுதி உரிமையாளர் காணாமல் போனதாக வந்த புகார் என இவ்விரு சம்பவங்களுக்கும் இடையே பல மர்ம முடிச்சுகள் இருந்தது தற்போது அம்பலப்பட்டுள்ளது..

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி பெண் பயிற்சி மருத்துவர், இரவு 11 மணியளவில் ட்யூட்டி முடித்துக்கொண்டு விடுதி நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், பெண் பயிற்சி மருத்துவரை நோக்கி பாய்ந்து ஓடி வர, அதிர்ச்சி அடைந்த பயிற்சி மருத்துவர் கூச்சலிட்டுள்ளார்.  உடனே சக மாணவர்கள் ஓடி வந்ததால் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார் அந்த மர்மநபர். இந்த விவகாரத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் பாதுகாப்பு இல்லை எனக் கூறி மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பெண் பயிற்சி மருத்துவரை துரத்திய அந்த மர்ம நபர் யார் என்ற விசாரணையில் போலீசார் இறங்கினர். அப்போது சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், விடுதிக்கும் இடையேயான சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆராய்ந்ததில் சந்தேகப்படும் படியான நபரின் நடமாட்டத்தை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து சிவகங்கை பேருந்து நிலையத்தில் படுத்திருந்த ஆவரங்காடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்ற நபரை கைது செய்து இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.

இதுஒரு புறம் இருக்க மதுரை போலீசாருக்கு ஒரு தகவல் வந்தது. மதுரையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்த அந்த காலில், கொடைக்கானலில் நபர் ஒருவரை கொலை  செய்து எரிந்துவிட்டதாக போதையில் ஒருவன் உளறிக்கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். உடனே கொடைக்கானல் போலீசாருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட போலீசாருக்கு விடுதி உரிமையாளர் காணாமல் போனதன் பொறிதட்ட உனவே சம்பந்தப்பட்ட தனியார் தங்கும் விடுதிக்கு சென்று அதிரடி விசாரணையில் இறங்கினர் போலீசார். விடுதி செயல்படாமல் இருந்த நிலையில் ஒரு அறையில் மட்டும் ரத்த கரைகள் இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

இதற்கிடையே கொலை செய்ததாக மதுரை மறுவாழ்வு மையத்தில் போதையில் உளறிக்கொட்டிய மணிகண்டன் என்பவனை கைது செய்தது மதுரை போலீஸ். கொடைக்கானலில் யாரை கொலை செய்தீர்கள் என துருவல் விசாரணையை நடத்திய அதேநேரம், கொடைக்கானல் தனியார் விடுதியில் கேம்ஃபயர் ஏரியாவில் மனித உடல் பாகங்கள் எரிந்த நிலையில் கிடப்பதை போலீசார் கண்டெடுத்தனர். இது நடந்துக்கொண்டிருக்கும் போதே சிவகங்கை சந்தோஷ் தான் கொலைக்கு காரணம் என மணிகண்டன் மதுரை போலீசாரிடன் கூற, சிவகங்கை-மதுரை-கொடைக்கானல் என போலீசாரின் மும்முணை விசாரணைக்கும் ஒரே மர்ம முடிச்சு இருப்பதை உணர்ந்தனர் போலீசார். இதைஅனைத்தையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

கொலைக்கானலில் காணாமல் போனதாக கூறப்பட்ட தனியார் விடுதி உரிமையாளர் சிவராஜ், கொடைக்கானலில் நாயுடுபுரம் பகுதியில் வசித்து வந்த நிலையில் போதைக்கு அடிமையாகி இருந்ததால், மதுரையில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை எடுத்து வந்ததாக தெரிகிறது. அந்த மறுவாழ்வு மையத்தில் அறிமுகமானவர்கள் தான் இந்த சந்தோஷும், மணிகண்டனும். சிகிச்சை முடிந்து ஊர் திரும்பிய சிவராஜ் கோடை காலத்தை முன்னிட்டு தனியார் விடுதி தொழிலை மீண்டும் துவங்க முடிவு செய்த நிலையில் அதற்கு துணையாக சந்தோஷ், மணிகண்டன் உள்பட மறுவாழ்வு மையத்தில் பழக்கமான 4 நண்பர்களை வேலைக்கு அழைத்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று இவர்களோடு விடுதியில் தங்கிய சிவராஜ், இரவு மது அருந்திய நிலையில் வேலைக்கான சம்பளத்தை நிர்ணயிப்பதில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சிவராஜ்ஜை 4 பேரும் சேர்ந்து அடித்து கொலை செய்தது அம்பலமானது. இதையடுத்து சிவராஜ்ஜின் தலையை துண்டித்து விடுதிக்கு அருகில் இருந்த புதரில் வீசியதோடு, உடலை துண்டுதுண்டாக வெட்டி கேம்ப் ஃபயர் ஏரியாவில் சிவராஜ்ஜின் உடல் பாகங்களையே விறகாக வைத்து தீ மூட்டி குளிர்காய்ந்திருக்கின்றனர் சந்தோஷும், மணிகண்டனும். 

பின் அங்கிருந்து கிளம்பி சிவகங்கைக்கு சென்ற போது தான் பெண் பயிற்சி மருத்துவரை துரத்திச்சென்றிருக்கிறான் சந்தோஷ். அதேநேரம் மதுரைக்கு சென்ற மணிகண்டன் தலைக்கேறிய போதையில் தான் சிகிச்சை பெற்ற மறுவாழ்வு மையத்துக்கு சென்று அங்கிருந்த சிலரிடம் நடந்ததை அரைகுறையாக உளறிகொட்டிய போது தான் விவரம் போலீசாரின் காதுகளுக்கு சென்றிருக்கிறது.    


Night
Day